அரசு என்றால் குறைகள் சகஜம் பசவராஜ் ராயரெட்டி ஒப்புதல்
கொப்பால்: அரசில் குளறுபடிகள் இருப்பதை, ஆளுங்கட்சி காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., பசவராஜ் ராயரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து, கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி: அரசு என்றால் பல குளறுபடிகள் இருப்பது சகஜம் தான். தொழில்நுட்ப காரணங்களால், இரண்டு லட்சம் பெண்களுக்கு கிரஹலட்சுமி திட்டத்தின் நிதியுதவி கிடைக்கவில்லை. இவர்கள் தகுதியான பயனாளிகள். கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 1.26 கோடி பெண்களுக்கு, நிதியுதவி வழங்க வேண்டும். சில காரணங்களால், 1.24 கோடி பெண்களுக்கு மட்டுமே, நிதி கிடைக்கிறது. மாதந்தோறும் எந்த ஊழலும் இல்லாமல், 2,500 கோடி ரூபாய் பயனாளிகளின் கணக்கில் செலுத்தப்படுகிறது. மாநிலத்தில் இறந்த பயனாளிகளின் கணக்குக்கும் பணம் செல்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுக்கும் நோக்கில், கிரஹலட்சுமி திட்டத்தில், மாற்றம் செய்யப்படுகிறது. கிரஹஜோதி திட்டத்தின் கீழ், 1.68 கோடி வீடுகளுக்கு, இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதில் அரசு ஊழியர்களின் வீடுகளும் உள்ளன. தகுதியானவர்களை அடையாளம் காண வேண் டியுள்ளது. ஆண்டு தோறும் வாக்குறுதி திட்டங்களுக்கு, 52,000 கோடி ரூபாய் செலவிடுவது கட்டாயம். இதை மாற்ற முடியாது. வாக்குறுதி திட்டங்களை தொடர்வதில், அவர் ஆர்வம் காட்டுகிறார். இது தனிப்பட்ட நபரின் திட்டங்கள் அல்ல. காங்கிரசின் திட்டங்களாகும். யார் முதல்வரானாலும் திட்டங்கள் நிற்காது. எதிர்க்கட்சியினர் சரியாக புரிந்து கொள்ளவில்லை. தேவையின்றி குற்றம்சாட்டுகின்றனர். அரசை எங்கு பிடிக்க வேண்டுமோ, அங்கு பிடிப்பது இல்லை. இன்னும் ஒரு வாரத்தில், அமைச்சரவை விஸ்தரிக்கப்படும். சித்தராமையா வழிகாட்டுதலில் நல்லாட்சி நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.