இரண்டு கைகள் நான்கானால்...
கர்நாடக அரசியலுக்கும் பல்லாரிக்கும் பிரிக்க முடியாத தொடர்பு உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவுக்கு, அரசியல் வாழ்க்கை கொடுத்ததும் பல்லாரி தான். 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் சோனியா, பா.ஜ., சார்பில் சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 56,100 ஓட்டுகள் வித்தியாசத்தில், சோனியா வெற்றி பெற்றாலும், அவருக்கு சுஷ்மா சுவராஜ் கடும் போட்டி அளித்தார். அவருக்கு ஆதரவாக பல்லாரியில் தீவிர பிரசாரம் செய்ததில், முன்னாள் அமைச்சர்கள் ஜனார்த்தன ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்கு முக்கிய பங்கு உண்டு. இருவரையும் 'இரட்டை காளைகள்' என்று, சுஷ்மா சுவராஜ் பாராட்டினார். பின், இருவரும் பா.ஜ., மேலிடத்தின் நம்பிக்கைக்குரிய தலைவராக வலம் வந்தனர். புதிய கட்சி கடந்த 2008ல் பா.ஜ., ஆட்சியின்போது, கனிம சுரங்க முறைகேட்டில் ஜனார்த்தன ரெட்டியை, சி.பி.ஐ., கைது செய்தது. அதன்பின் கட்சியில் அவருக்கு இருந்த செல்வாக்கு குறைந்தது. சிறையில் இருந்து வந்த பின், ஜனார்த்தன ரெட்டியை கட்சியில் சேர்க்க பா.ஜ., மேலிடம் தயக்கம் காட்டியதால், 'கல்யாண ராஜ்ய பிரகதி' என்ற பெயரில் தனி கட்சியை ஆரம்பித்தார் ரெட்டி. கடந்த 2023 சட்டசபை தேர்தலில், கொப்பாலின் கங்காவதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார் ரெட்டி. பல்லாரியில் தன் மனைவியை வேட்பாளராக நிறுத்தினார். ஓட்டுகள் பிரிந்ததால் காங்கிரசின் பரத் ரெட்டி வென்றார். ரெட்டி இல்லாமல் பல்லாரியில் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த பா.ஜ., மேலிடம் அவரை மீண்டும், கட்சியில் இணைத்துக் கொண்டது. செல்வாக்கு ஆனால், ரெட்டி வந்தால் தன் செல்வாக்கு குறைந்து விடும் என்று நினைத்த ஸ்ரீராமுலு, முட்டுக்கட்டை போட பார்த்தார். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. ரெட்டி கட்சியில் இணைந்த பின், ஒரு காலத்தில் நண்பர்களாக இருந்த ரெட்டி, ஸ்ரீராமுலு இடையே விரிசல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டனர். இது பா.ஜ., மேலிடத்திற்கு தலைவலியாக மாறியது. இருவரையும் ஒன்றிணைக்கும் பொறுப்பு, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவுக்கு வழங்கப்பட்டது. 'எங்களை யாரும் சேர்த்து வைக்க வேண்டாம். நாங்களே சேர்ந்து கொள்கிறோம்' என, ரெட்டியும், ஸ்ரீராமுலுவும் மீண்டும் ஒருங்கிணைந்துள்ளனர். இது பா.ஜ., மேலிடத்திற்கு குஷியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து வேலை செய்தால், பல்லாரி, விஜயநகரா, கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, சித்ரதுர்கா ஆகிய மாவட்டங்களில் பா.ஜ., செல்வாக்கு கூடும். தலைவலி கடந்த தேர்தலில் வடமாவட்டங்களில் பா.ஜ., கோட்டையாக இருந்த தொகுதிகளிலும், காங்கிரஸ் வெற்றி பெற்றது. அடுத்த தேர்தலில் விட்டதை பிடிக்க வேண்டும் என்பதில், பா.ஜ., மேலிடம் தீவிரமாக உள்ளது. கல்யாண கர்நாடகா பகுதியில் கட்சியை பலப்படுத்தும் பொறுப்பை ரெட்டி, ஸ்ரீராமுலுவுக்கு கொடுக்க உள்ளனர். நண்பர்கள் மீண்டும் இணைந்தது, காங்கிரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ரெட்டி விஷயத்தில் பா.ஜ., மேலிடம் மீது அதிருப்தியில் இருந்த ஸ்ரீராமுலுவுக்கு, காங்கிரஸ் வலை விரித்தது. அவரும் கட்சி தாவும் மனநிலையில் தான் இருந்தார். ஆனால் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ஸ்ரீராமுலுவுடன் பேசி அவரை சமாதானம் செய்தது குறிப்பிடத்தக்கது. - நமது நிருபர் -