உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுத்தம் என்பதை மறந்தால் நகரமே குப்பை மேடு தான் மெஜஸ்டிக்கில் பயன்படாத நடைபாதை, சுரங்கப்பாதை

சுத்தம் என்பதை மறந்தால் நகரமே குப்பை மேடு தான் மெஜஸ்டிக்கில் பயன்படாத நடைபாதை, சுரங்கப்பாதை

பெங்களூரின் மெஜஸ்டிக்கை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலத்தின் நடைபாதைகளை ஆக்கிரமித்து வியாபாரிகள் பூக்கள், காய்கறிகள் என பல விதமான பொருட்களை விற்கின்றனர். பாதசாரிகள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும், காணாமல் உள்ளனர். மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையம், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையத்தில் இருந்து பயணியர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் நடமாடும் நோக்கில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இதே சுரங்கப்பாதை வழியாக பி.எம்.டி.சி., பஸ் நிலையம், சங்கொல்லி ராயண்ணா ரயில் நிலையத்துக்கு செல்லும் வசதி உள்ளது. இந்த சுரங்கப்பாதை மக்களுக்கு முழுமையாக பயன்படுவது இல்லை. ஆக்கிரமிப்பு சுரங்கப்பாதையின் இரண்டு ஓரங்களையும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். பழங்கள், வீட்டு உபயோக பொருட்கள், காய்கறிகள் விற்கின்றனர். நடமாடுவதற்கும் இடம் இல்லை. மெஜஸ்டிக்கில் இருந்து காந்தி நகருக்கு செல்லும் சுரங்கப்பாதையிலும், இதே பிரச்னை உள்ளது. விநாயகர் கோவிலுக்கு செல்லும் பிளாட்பாரம் சாலையையும், துணி வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். மெஜஸ்டிக் மேம்பாலத்தின் நடைபாதையில் பாதுகாப்புக்கு ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களின் பேச்சை வியாபாரிகள் மதிப்பதில்லை என, கூறப்படுகிறது. நடைபாதையிலேயே பொருட்களை குவித்து வைத்து, வியாபாரம் செய்கின்றனர். நடைபாதையிலேயே கடிகாரம், ஸ்பீக்கர், இயர் போன், மொபைல் போன் கவர், விளையாட்டு பொருட்கள், ரெடிமேட் உடைகளை விற்கின்றனர். இது குறித்து, கேள்வி எழுப்பும் பொது மக்களை, வியாபாரிகள் மிரட்டுவதுடன் தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. யாருக்கும் பயப்படுவது இல்லை. மெஜஸ்டிக் பஸ் நிலையம், ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணியரின் வசதிக்காக, சுரங்கப்பாதை கட்டப்பட்டது. 'கட்டாயமாக சுரங்கப்பாதையை பயன்படுத்துங்கள்' என ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் நடமாடும் இடத்தை வியாபாரிகள் ஆக்கிரமித்து, வியாபாரம் செய்வதால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகின்றனர். ஐகோர்ட் உத்தரவு மெஜஸ்டிக்கின் பொது இடங்களில், வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க கூடாது என, 2019 ஆகஸ்ட் 27ல் கர்நாடக உயர் நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்பின் விழித்து கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்தினர். ஆனால் இப்போது அதே இடத்தில் கடைகள் தென்படுகின்றன. சுரங்கப்பாதையில் துாய்மை என்பது சுத்தமாக இல்லை. ஆங்காங்கே குப்பை கிடக்கிறது. குட்கா, பான் மசாலாவை மென்று உமிழ்ந்துள்ளனர். சுரங்கப்பாதையில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். சுத்தமாக பராமரிக்க வேண்டும் என, பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா என, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ