உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்கும் இளகல் சேலைகள்

ஜவுளி உற்பத்தியில் சிறந்து விளங்கும் இளகல் சேலைகள்

கர்நாடகாவின், மைசூரு பட்டுச்சேலை மிகவும் பிரபலம் என்பது, அனைவருக்கும் தெரியும். அதே போன்று, இளகல் பருத்தி சேலைகளும், பெண்களை வெகுவாக ஈர்க்கின்றன. பார்டர் வைத்த சேலைகள், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பாகல்கோட் மாவட்டம், இளகல் நெசவாளர்கள், கைத்தறி பருத்தி சேலைகள் நெய்வதில் கை தேர்ந்தவர்கள். இளகல் சேலைகள் உற்பத்தி, எட்டாம் நுாற்றாண்டில் துவங்கப்பட்டது. அந்த காலத்தில் இந்த சேலைகள் அணிவதை, பெண்கள் கவுரவமாகவே கருதினர். மிகவும் கலை நயத்துடன் உள்ள சேலைகள், நெசவாளர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தியது. இத்தகைய சேலைகளை உடுத்தினால், பெண்களுக்கு தனி கம்பீரம் தென்படும். மைசூரு பட்டு, காஞ்சிபுரம் பட்டு, தர்மாவரம் பட்டு, பனாரஸ் உட்பட, பல்வேறு சேலைகள் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன என்றாலும், இளகல் சேலைக்கு தனி மவுசு உள்ளது. காலத்துக்கு தகுந்தபடி, சேலைகளின் டிசைன் மாறுகிறதே தவிர, மவுசு அப்படியே உள்ளது. இந்திய ஜவுளி உற்பத்தியில், இளகல் பருத்தி சேலைகளுக்கும் முக்கிய பங்குள்ளது. திருமணம், நிச்சயதார்த்தம் என, அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இந்த சேலைகள் ஆர்டர் செய்து வாங்குகின்றனர். விதவிதமான வண்ணங்கள், டிசைன்களில் சேலைகள் தயாராகின்றன. ஆறு கஜம், எட்டு கஜம், ஒன்பது கஜம் உட்பட, பல்வேறு நீளத்தில் இளகல் சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இளகல்லில் 20,000 நெசவாளர்கள், இந்த தொழிலை நம்பியுள்ளனர். மஹாராஷ்டிராவில் இருந்து புலம் பெயர்ந்த நெசவாளர்கள், இளகல்லுக்கு வந்தனர். இங்கு சேலை நெய்ய பயன்படுத்தும் பருத்தி, அதிகமாக கிடைத்ததால் இங்கேயே வேரூன்றினர். சேலையின் உடல், முந்தானை மிகவும் அற்புதமாக இருக்கும். இதற்கு மயங்காத பெண்களே இருக்க முடியாது. ஒரு காலத்தில் பணக்கார குடும்பத்து பெண்கள், அதிகமாக இச்சேலைகளை பயன்படுத்தினர். இப்போது அனைத்து பெண்களும் விரும்பி வாங்குகின்றனர். இளகல் மட்டுமின்றி, கதக் மாவட்டத்தின் பெடகேரி, கஜேந்திரகடா உட்பட பல்வேறு தாலுகாக்களில் பருத்தி சேலைகள் பிரசித்தி பெற்றுள்ளது. சேலை நெய்வது முக்கிய தொழிலாக உள்ளது. பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. மும்பை, தெலுங்கானா உட்பட, பல்வேறு மாநிலங்கள் மொத்தமாக ஆர்டர் செய்து, சேலைகளை வாங்குகின்றனர். வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. திருமண சீசனில் சேலைகள் விற்பனை அதிகரிக்கிறது. ஜவுளித்துறையில் இளகல் மற்றும் கதக் நெசவாளர்கள், கர்நாடகாவின் பெருமையை உயர்த்துகின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி