உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எம்.எல்.ஏ.,க்களின் வருமானம் பல மடங்கு அதிகரிப்பு

எம்.எல்.ஏ.,க்களின் வருமானம் பல மடங்கு அதிகரிப்பு

பெங்களூரு: கடந்த இரண்டு ஆண்டுகளில் கர்நாடக எம்.எல்.ஏ.,க்களின் வருமானம் பல மடங்கு அதிகரித்து இருப்பது, 'சிவிக்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்து உள்ளது.நகர்ப்புற நிர்வாகம் மற்றும் பரவலாக்கலில் கவனம் செலுத்தும், லாப நோக்கற்ற சிவிக் பெங்களூரு அமைப்பு, பெங்களூரு, பெங்களூரு ரூரல் தொகுதிகளை சேர்ந்த 32 எம்.எல்.ஏ.,க்கள், நான்கு எம்.பி.,க்களின் கடந்த ஆறு மாத செயல்பாடு குறித்து ஆய்வு செய்து, 'நம்ம நேதா நம்ம விமர்சனம்' என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

கோபாலய்யா

இந்த அறிக்கையில், பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் வருமானம் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. பெங்களூரு மஹாலட்சுமி லே - அவுட் பா.ஜ., - எம்.எல்.ஏ., கோபாலய்யாவின் வருமானம் 1,339 சதவீதம் உயர்ந்து உள்ளது. அவர் தான் முதலிடத்தில் உள்ளார். ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவின் வருமானம் 959 சதவீதமும்; சாந்திநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் வருமானம் 318 சதவீதமும் உயர்ந்து உள்ளது. எதிர்க்கட்சி தலைவர் அசோக் வருமானமும் 104 சதவீதம் உயர்ந்து உள்ளது.

மஞ்சுளா

முனிரத்னா மீது பலாத்காரம் உட்பட 8 குற்ற வழக்குகள் உள்ளன. அதிக குற்ற வழக்குகளை கொண்ட எம்.எல்.ஏ., இவர் தான். உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அரசு வழங்கிய 4 கோடி ரூபாயை, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சி.வி.ராமன்நகர் ரகு, சிக்பேட் உதய் கருடாச்சார், கே.ஆர்.புரம் பைரதி பசவராஜ், ஹொஸ்கோட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சரத் பச்சேகவுடா ஆகிய 4 பேரும் முழுமையாக பயன்படுத்தி உள்ளனர். ஆறு எம்.எல்.ஏ.,க்கள் 90 சதவீத நிதியை பயன்படுத்தி உள்ளனர். மஹாதேவபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., மஞ்சுளா லிம்பாவளி, உள்ளூர் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை எந்த பணிக்கும் ஒதுக்கவில்லை.

சீனிவாஸ்

சட்டசபைக்கு எம்.எல்.ஏ.,க்கள் வருகையில், நெலமங்களா காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் 100 சதவீத வருகை பதிவுடன் உள்ளார். கோவிந்தராஜ்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரியா கிருஷ்ணா 53.62 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளார். பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., - எம்.பி., மோகன், தற்போதைய பதவிக்காலத்தில் மத்திய அரசு ஒதுக்கிய 5 கோடி ரூபாய் நிதியில் 47 லட்சம் ரூபாய் மட்டும் தொகுதிக்கு ஒதுக்கி உள்ளார். பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா தனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 34.38 சதவீதத்தை குடிநீருக்கும், 30.17 சதவீதத்தை பொது இட ஒதுக்கீட்டிற்கும் கொடுத்து உள்ளார். பெங்களூரு வடக்கு பா.ஜ., - எம்.பி., ஷோபா தனக்கு ஒதுக்கிய நிதியில் 19.47 சதவீதத்தை கல்வி துறைக்கு கொடுத்து உள்ளார். பெங்களூரு ரூரல் பா.ஜ., - எம்.பி., மஞ்சுநாத், மற்ற மூன்று எம்.பி.,க்களை விட தொகுதிக்கு நிதி ஒதுக்குவதில் முன்னணியில் உள்ளார். அவர் இதுவரை 6.30 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்.

84 கேள்விகள்

பார்லிமென்ட் கூட்டத்தொடரில் மோகன் 98.51 சதவீதம் வருகை பதிவை கொண்டு இருந்தாலும், ஒரே ஒரு விவாதத்தில் மட்டும் தான் பங்கேற்று உள்ளார். வருகை பதிவில் சராசரியான 87 சதவீதத்தை விட 77.61 சதவீதம் வருகை பதிவு கொண்ட தேஜஸ்வி சூர்யா 13 விவாதங்களில் பங்கேற்று 84 கேள்விகள் கேட்டு உள்ளார். அதில் ஆறு பெங்களூரு தொடர்பானது. மஞ்சுநாத்தின் வருகை பதிவேடு 94 சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி