உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பெங்களூரை தாண்டி தொழில் வளர்ச்சி ஜப்பானில் முதல்வர் சிவகுமார் பேச்சு

பெங்களூரை தாண்டி தொழில் வளர்ச்சி ஜப்பானில் முதல்வர் சிவகுமார் பேச்சு

– நமது நிருபர் – பெங்களூரை தாண்டி தொழில் துறையை வளர்ச்சி அடைய செய்வதில், கர்நாடக அரசு உறுதியாக இருப்பதாக, ஜப்பானில் முதல்வர் சிவகுமார் தெரிவித்தார். தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜப்பான் சென்றுள்ள முதல்வர் சிவகுமார், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், துறையின் செயலர் செல்வகுமார் உள்ளிட்டோர், நயோகாவில் உள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலைக்கு நேற்று சென்றனர். கர்நாடகாவின் பிடதியில் உள்ள டொயோட்டா ஆலையில் இருந்து, நயோகா கார் உற்பத்தி ஆலைக்கு பயிற்சிக்கு வந்துள்ள, கர்நாடகாவை சேர்ந்த 20 ஊழியர்களுடன், சிவகுமார் கலந்துரையாடினார். ‘உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள்; தொழில்நுட்ப திறன், நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம் கர்நாடகாவின் வளர்ச்சிக்கு பங்களியுங்கள்’ என்று கூறினார். பின், டொயோட்டா நிறுவன உயர் அதிகாரிகள் மத்தியில், சிவகுமார் பேசுகையில், ‘‘கர்நாடகாவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதிலும், ‘பெங்களூருக்கு அப்பால்’ என்ற திட்டத்தின் மூலம், பெங்களூரை தாண்டி தொழில் துறையை வளர்ச்சி அடைய செய்வதிலும், முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் நாங்கள் உறுதியாக உள்ளோம். கர்நாடகாவின் ஒவ்வொரு மாவட்டத்தையும் வளர்ச்சி பயணத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதே அரசின் நோக்கம்,’’ என்றார். முன்னதாக டோக்கியோவில் இருந்து நயோகாவுக்கு புல்லட் ரயிலில், சிவகுமார் பயணம் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !