உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் கைதானவருக்கு இடைக்கால ஜாமின்

 எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் கைதானவருக்கு இடைக்கால ஜாமின்

- நமது நிருபர் -: எஸ்.ஐ., தேர்வு முறைகேடு வழக்கில் கைதான ஆர்.டி.பாட்டீலுக்கு, மகள் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கி உள்ளது. கர்நாடகாவில் 2021ம் ஆண்டு நவம்பரில் 545 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது. 2022ல் தேர்வு முடிவுகள் வெளியானபோது, முறைகேடு நடந்திருப்பது தெரிந்தது. தேர்வர்களிடம் 30 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, விடைத்தாளை திருத்தி முறைகேடு செய்தது, அம்பலமானது. இந்த வழக்கில் ஆள்சேர்ப்புப் பிரிவு முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., அம்ருத்பால், கலபுரகியை சேர்ந்த ஆர்.டி.பாட்டீல் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஜாமினில் வெளியே வந்த ஆர்.டி.பாட்டீல், 2023ல் கிராம பஞ்சாயத்து ராஜ் துறைக்கு நடந்த தேர்விலும், தேர்வர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு, தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனால் அவரது ஜாமின் ரத்தானது. மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். ஆர்.டி.பாட்டீல் மகளுக்கு அடுத்த மாதம் 4ம் தேதி திருமணம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இடைக்கால ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளையில் மனுத் தாக்கல் செய்தார். மனு தள்ளுபடி ஆனதால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதி வினோத் சந்திரா விசாரித்தார். மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், மனுதாரருக்கு மூன்று வாரம் இடைக்கால ஜாமின் வழங் கி, நேற்று முன்தினம் நீதிபதி வினோத் சந்திரா உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்