உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / காவிரி ஆரத்திக்கு இடைக்கால தடை

காவிரி ஆரத்திக்கு இடைக்கால தடை

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாருக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் 'ஷாக்' அளித்துள்ளது. கே.ஆர்.எஸ்., அணையில் 'காவிரி ஆரத்தி' நிகழ்ச்சி நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.துணை முதல்வர் சிவகுமார், காசியில் நடக்கும் கங்காரத்தி போன்று, காவிரி நீர்ப்பாசன அணையான கே.ஆர்.எஸ்., வளாகத்தில் 'காவிரி ஆரத்தி' நடத்த திட்டமிட்டுள்ளார். ஆண்டு முழுதும் ஆரத்தி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது அவரது கனவு திட்டமாகும். முதற்கட்ட விழாவுக்கு 100 கோடி ரூபாய் செலவிட, அரசு முடிவு செய்துள்ளது.இதற்கு விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். காவிரி ஆரத்திக்கு 100 கோடி ரூபாய் அவசியமா என கேள்வி எழுப்பினர். மக்களின் வரிப்பணத்தை வீணாக்குவது சரியல்ல என, அதிருப்தி தெரிவித்தனர்.அரசின் முடிவை எதிர்த்து, மாண்டியாவின் விவசாய சங்கத்தலைவி சுனந்தா ஜெயராம் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொது நலன் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி காமேஸ்வர ராவ் முன்னிலையில், நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சிவபிரகாஷ், 'காவிரி ஆரத்திக்காக, 100 கோடி ரூபாய் செலவிடுகின்றனர். அணையில் இருந்து 40 மீட்டர் துாரத்தில், 20,000 முதல் 25,000 பேர் அமரும் வகையில், பெரிய ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது. அணை அருகிலேயே, 5,000 வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்படுகிறது. இது அணையின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தண்ணீர், சுற்றுச்சூழல் மற்றும் காற்று மாசுவுக்கும் காரணமாகும். அரசின் முடிவு அணைகள் பாதுகாப்பு சட்டம் - 2021க்கு எதிரானது' என வாதிட்டார்.அணை அருகில் 120 அடி உயரமான காவிரித்தாய் விக்ரகம் அமைக்கப்படுவது, பெரிய, பெரிய இயந்திரங்கள் பயன்படுத்துவதையும், நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதற்கான போட்டோக்களையும் சமர்ப்பித்தார்.மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'பணிகள் நடத்துவதால் அணைக்கு அபாயம் ஏற்படாதா, பணிகளை துவக்குவதற்கு முன்பு, அணை பாதுகாப்பு கமிட்டியிடம் அனுமதி பெறாதது ஏன்? காவிரி சிலை அமைக்கும்போது, வல்லுநர்களின் ஆலோசனைகள் பின்பற்றப்பட்டதா?' உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினார்.காவிரி ஆரத்திக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி, இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, கர்நாடக அரசுக்கும், காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷனுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ