எஸ்.சி., சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு மசோதா: கவர்னர் ஒப்புதல்
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு துறைகளில் காலியாக உள்ள 2.86 லட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி, மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், எஸ்.சி., - எஸ்.டி., சமூக அமைச்சர்களுடன் முதல்வர் சித்தராமையா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். இதன்பின், கவர்னரை சந்தித்த அமைச்சர்கள், உள்இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று, மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்து உள்ளார். கர்நாடக அரசின் பல்வேறு துறைகளிலும், 2.86 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப கடந்த ஐந்து ஆண்டுகளாக, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், போட்டி தேர்வுக்கு தயாராகும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், கடந்த, 24ம் தேதி அரசை கண்டித்து தார்வாடில் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். பணியிடங்களை நிரப்ப படிப்படியாக நடவடிக்கை எடுப்பதாக அரசு உறுதி அளித்தாலும், அவர்கள் ஏற்கவில்லை. இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. பணியிடங்களை நிரப்ப காங்கிரஸ் அரசுக்கு, எதிர்க்கட்சிகளும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் அரவிந்த் பெல்லத், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி, கர்நாடகாவில் காலி பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில், நீங்கள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கான உள் இடஒதுக்கீடு மசோதாவில், கவர்னர் கையெழுத்திடுவதில் ஏற்பட்ட தாமதத்தால், பணியிடங்களை நிரப்ப காலதாமதமாகிறது என்பது, ஆளுங்கட்சி தலைவர்களின் வாதமாக இருந்தது. ஆலோசனை இந்நிலையில், முதல்வர் சித்தராமையா, எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா, முனியப்பா, திம்மாபூர், எஸ்.டி., சமூக அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோருடன், அரசு இல்லத்தில் நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். உள்இடஒதுக்கீடு மசோதாவில் கவர்னர் கையெழுத்திட மேலும் தாமதப்படுத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்தனர். பின், முதல்வர் இல்லத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர்கள் நேராக லோக்பவனுக்கு சென்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தனர். மாணவர்கள் நடத்தும் போராட்டம் பற்றி எடுத்து கூறியதுடன், உள்இடஒதுக்கீடு மசோதாவில் கையெழுத்திடும்படி வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற கவர்னர் மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். 17 சதவீதம் கர்நாடகாவில், எஸ்.சி., சமூகத்திற்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஓய்வு நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையில், அரசு ஆணையம் ஒன்றை அமைத்தது. அந்த ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில், 'எஸ்.சி., வலது பிரிவுக்கு 6 சதவீதம்; இடது பிரிவுக்கு 6 சதவீதம்; மற்றவர்களுக்கு 5 சதவீதம் வழங்க இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தது. இந்த அறிக்கையை உள் இடஒதுக்கீடு பட்டியல் சாதியினர ்(துணை வகைப்பாடு) 2025 மசோதாவாக கவர்னர் அனுமதிக்கு அரசு அனுப்பியது. ஆனால், நாகமோகன் தாஸ் அறிக்கையை எஸ்.சி., சமூகத்தினரில், சில பிரிவினர் ஏற்க மறுத்தனர். மசோதாவில் கையெழுத்திட கூடாது என்று கவர்னரிடமும் கோரிக்கை வைத்தனர். கடந்த மாதம், 9 ம் தேதி மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார். நிறைய விளக்கமும் கேட்டு இருந்தார். பின், திருத்தப்பட்ட மசோதா சமர்பிக்கப்பட்டு இருந்தது. தற்போது கவர்னர் ஒப்புதல் கிடைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. உள் இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கிடைத்து இருப்பதன் மூலம், வரும் நாட்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, ஆள்சேர்ப்பு நடைமுறை துவங்கப்படலாம்.