உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கைதிகளுக்கு கிடைத்த சொகுசு வசதி பெங்களூரு சிறையில் விசாரணை 

 கைதிகளுக்கு கிடைத்த சொகுசு வசதி பெங்களூரு சிறையில் விசாரணை 

பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைத்தது பற்றி, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையிலான குழுவினர், விசாரணையை துவக்கி உள்ளனர். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பயங்கரவாதி ஜுகாத் சகீல் மன்னா, பல பெண்களை பலாத்காரம் செய்து கொன்ற உமேஷ் ஷெட்டி உள்ளிட்ட கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ கடந்த 8 ம் தேதி வெளியானது. இதுபோன்று சிறையில் கைதிகள் மது குடித்து ஆட்டம் போடும் வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது, அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய நிலையில், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சிறை தலைமை கண்காணிப்பாளர் சுரேஷை இடமாற்றம் செய்தார். சிறை கண்காணிப்பாளர் மகேரி, உதவி கண்காணிப்பாளர் அசோக் பஜந்திரி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். கைதிகளுக்கு சொகுசு வசதி கிடைத்தது பற்றி விசாரிக்கவும், மாநிலம் முழுதும் உள்ள சிறைகளுக்கு என்னென்ன தேவை என்பது பற்றி அறியவும், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சந்தீப் பாட்டீல், அமர்நாத் ரெட்டி, ரிஷ்யந்த் உள்ளனர். இந்த குழுவினர் நேற்று தங்கள் விசாரணையை துவக்கினர். சிறைக்கு சென்று கைதிகள் அறையை ஆய்வு செய்தனர். சிறை அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரித்து தகவல் பெற்றனர். சஸ்பெண்ட் ஆன இருவரிடமும், வரும் நாட்களில் விசாரிக்க உள்ளனர். சிறையில் அதிகாரிகள், ஊழியர்கள் இடையில் தனி தனி குழுக்கள் உள்ளன. தங்களுக்கு தொல்லை தரும் அதிகாரிகளை மாட்டி விட, ஊழியர்களே, கைதிகள் கையில் மொபைல் போனை கொடுத்து இருக்கலாம் என்றும், விசாரணை குழுவுக்கு சந்தேகம் உள்ளது. இதற்கிடையில் சிறை அதிகாரி கோபிநாத் அளித்த புகாரின்படி, மது குடித்துவிட்டு சிறையில் நடனமாடிய கைதிகள் கார்த்திக், தனஞ்ஜெய், மஞ்சுநாத், சரண் ராவ் மீது பரப்பன அக்ரஹாரா போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவில் உள்ள கைதிகளிடமும், விசாரணை குழு விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ