உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐ.பி.எஸ்., ராமசந்திர ராவ் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து 

 ஐ.பி.எஸ்., ராமசந்திர ராவ் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து 

பெங்களூரு: பணி நேரத்தில் பெண் ஊழியர்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதால், ஐ.பி.எஸ்., ராமசந்திர ராவ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அரசு நேற்று திரும்ப பெற்றது. அவருக்கு புதிய பதவி வழங்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றுபவர் ராமசந்திர ராவ். 1993 ம் ஆண்டு ஐ.பி.எஸ்., கேடரை சேர்ந்த இவர், மனித உரிமைகள் ஆணைய டி.ஜி.பி.,யாக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராமசந்திர ராவ் பெலகாவியில் பணியாற்றிய போது, தனது அலுவலகத்தில் பணி செய்த பெண் ஊழியர்களுடன், பணி நேரத்தில் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் ராமசந்திர ராவின் சஸ்பெண்ட் உத்தரவை அரசு நேற்று திரும்ப பெற்றது. போலீஸ் துறை கையேடு பராமரிப்பு என்று புதிதாக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறையின் டி.ஜி.பி.,யாக நியமித்து உள்ளனர். இப்பதவி சி.ஐ.டி., - டி.ஜி.பி., பதவிக்கு இணையானது என்றும், நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. ராமசந்திர ராவ் இம்மாதம் 31 ம் தேதியுடன், பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளார். இதனை கருத்தில் கொண்டு அவரது சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற்றதுடன், புதிய பொறுப்பும் அளிக்கப்பட்டு உள்ளது. தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே உள்ள நடிகை ரன்யா ராவுக்கு, ராமசந்திர ராவ் வளர்ப்பு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை