கர்நாடக தற்காலிக டி.ஜி.பி.,யாக ஐ.பி.எஸ்., சலீம் பொறுப்பேற்பு
பெங்களூரு: கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.,யாக இருந்த அலோக் மோகன் பதவிக்காலம், கடந்த ஏப்ரல் 30ம் தேதியுடன் முடிந்தது. அவரது பதவிக்காலம் இம்மாதம் 21ம் வரை நீட்டிக்கப்பட்டது. அலோக் மோகனுக்கு பின், புதிய டி.ஜி.பி., யார் என்று எதிர்பார்ப்பு எழுந்தது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான தீயணைப்பு துறை டி.ஜி.பி., பிரசாந்த் குமார் தாக்கூர், குற்ற விசாரணை டி.ஜி.பி., சலீம் இடையில் போட்டி ஏற்பட்டது.கன்னடரான சலீமுக்கு டி.ஜி.பி., பதவி கொடுக்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகளிடம் இருந்து அரசுக்கு அழுத்தம் வந்தது. ஆனால் பணி மூப்பு அடிப்படையில் பார்த்தால், சலீமை விட பிரசாந்த் குமார் தாக்கூர், ஒரு ஆண்டு சீனியர் ஆவார். யாருக்கு டி.ஜி.பி., பதவி என்று முடிவு எடுக்க முடியாமல் அரசு திணறி வந்தது. இதற்கிடையில், அலோக் மோகன் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 'அடுத்த உத்தரவு வரும் வரை, குற்ற விசாரணை டி.ஜி.பி., பொறுப்புடன், கூடுதல் பொறுப்பாக டி.ஜி.பி., பொறுப்பையும் சலீம் கவனிப்பார்' என்று கூறப்பட்டு இருந்தது.நேற்று மாலையில், நிருபதுங்கா சாலையில் உள்ள டி.ஜி.பி., அலுவலகத்தில், சலீம் டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்று கொண்டார். அவரிடம் அலோக் மோகன் தனது பொறுப்பை ஒப்படைத்தார்.முன்னதாக நேற்று காலையில், கோரமங்களாவில் உள்ள கே.எஸ்.ஆர்.பி., பரேட் மைதானத்தில் அலோக் மோகனுக்கு, பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது. போலீசார் அணிவகுப்பு கவுரவத்தை, அவர் ஏற்றுக்கொண்டார்.இதில் அவர் பேசிய தாவது:பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு போலீஸ் பிரிவுகளில் பணியாற்றியுள்ளேன்.ஒவ்வொரு பிரிவில் பணியாற்றும் போது, அனைத்து உயர் அதிகாரிகள், கீழ் நிலை அதிகாரிகள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன்.போலீஸ் துறையில் 38 ஆண்டு காலம் பணியாற்றினேன். மாநிலம் மட்டுமின்றி, வெளிநாட்டிலும் கூட, நான் பணியாற்றி உள்ளேன். அந்த நேரத்தில் பல்வேறு நாடுகள், மாநிலங்களின் போலீசாரின் பணித்திறனை கவனித்துள்ளேன். நாட்டிலேயே கர்நாடகா போலீஸ் துறை சிறப்பாக பணியாற்றுகிறது. இதை கூற நான் பெருமைப்படுகிறேன்.சிறப்பாக பணியாற்றிய, 200 போலீஸ் அதிகாரிகள், ஏட்டுகளுக்கு இப்போதே முதன் முறையாக, மாநில போலீஸ் டி.ஜி.பி., பெயரில் பாராட்டு பதக்கம் வழங்கியுள்ளேன். அரசு சார்பில் 200 பேருக்கு மட்டுமே இந்த பதக்கம் வழங்க, அனுமதி உள்ளது. அனைவருக்கும் வழங்க முடியாது. அனைத்து அதிகாரிகளும், ஏட்டுகளும் சிறப்பாக பணியாற்றுகின்றனர்.இவ்வாறு பேசினார்.