அணைகளில் சகதி அதிகரிப்பு நீர்ப்பாசன வல்லுநர்கள் கவலை
பெங்களூரு : துங்கபத்ரா அணை உட்பட, கர்நாடகாவின் முக்கியமான 12 அணைகளில் சேகரமாகும் சகதி மற்றும் மண்ணின் அளவு, தொடர்ந்து அதிகரிக்கிறது. வரும் காலத்தில் இது குடிநீர் பிரச்னைக்கு காரணமாகும் என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, நீர்ப்பாசன வல்லுநர்கள் கூறியதாவது: மத்திய நீர்ப்பாசனத் துறையின் விதிகளின்படி அணைகளில் மண் மற்றும் சகதி 3 சதவீதம் இருக்கலாம். துங்கபத்ரா அணையை தவிர, மற்ற அணைகளில் மண் அளவு 2 சதவீதமாக உள்ளது. ஆனால் ஆண்டுதோறும் அணைகளில் சேரும் மண்ணின் அளவை கணக்கிட்டால், அடுத்த 10 ஆண்டுகளில், பெரும்பாலான அணைகளில், மண் அளவு அபாய கட்டத்தை தாண்டும். இது, கவலைக்குரிய விஷயமாகும். நீர்ப்பாசன வல்லுநர்களின் ஆய்வில், அணைகளில் மண் அளவு அதிகரிப்பது தெரிந்தது. வல்லுநர்களின் அறிக்கை பரிந்துரைப்படி, துங்கபத்ரா, மல்லபிரபா, பத்ரா, கட்டபிரபா, அலமாட்டி, ஹிப்பரகி, பசவசாகரா, கே.ஆர்.எஸ்., கபினி, ஹாரங்கி, வாணி விலாஸ், ஹேமாவதி ஆகிய 12 முக்கிய அணைகளில் மண் மற்றும் சகதி அதிகம் உள்ளது. முதலில் ஹாரங்கி அணையில் மண்ணை அள்ளும் பணி துவங்கப்பட்டது. ஆனால் நான்கு ஆண்டுகளாக, பணி நடக்கிறது. மாநிலத்தின் மிகப்பெரிய அணை என்ற பெருமை பெற்றுள்ள அலமாட்டி அணையில், 8 டி.எம்.சி., அளவுக்கு மண் இருக்கலாம் என, கணக்கிடப்படுகிறது. 2008க்கு பின், ஆண்டுக்கு 1 டி.எம்.சி., அளவு மண் அதிகரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் வல்லுநர் குழுவை அமைத்து, அணைகளை ஆய்வு செய்கின்றன; அறிக்கை பெறுகின்றன. ஆனால் ஆய்வு நடத்த காட்டும் ஆர்வத்தை, வல்லுநர்களின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் அரசுகள் காட்டுவது இல்லை என்பது, வருத்தமான விஷயம். அரசின் அலட்சியத்துக்கு 11 அணைகளின் சூழ்நிலையே சாட்சியாகும். துங்கபத்ரா அணை உட்பட, கர்நாடகாவின் முக்கியமான 12 அணைகளில் சேகரமாகும் மண்ணின் அளவு, தொடர்ந்து அதிகரிக்கிறது. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இதை அலட்சியப்படுத்தினால், எதிர்காலத்தில் அணைகளில் நீர் சேகரிப்பு திறன் குறையும். குடிநீர் தட்டுப்பாடு கூட ஏற்படலாம். எனவே, அணைகளின் மண்ணை அள்ளி, நீர் சேகரிப்பு திறனை அதிகரிக்க, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.