சபாநாயகர் காதரை விமர்சித்த ஹரிஷ் பூஞ்சா பதவி தப்புமா?
பெங்களூரு: சபாநாயகர் காதரை மத ரீதியாக விமர்சித்த பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா பதவியை பறிக்கக் கோரி, சட்டசபை உரிமை குழு தலைவரிடம் காங்கிரஸ் புகார் செய்துள்ளது.பெங்களூரு விதான் சவுதாவில், சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்தது. 'ஹனி டிராப்' பிரச்னை தொடர்பாக பா.ஜ., உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பட்ஜெட் புத்தகத்தை கிழித்து, சபாநாயகர் காதர் மீது வீசினர். சபாநாயகர் பீடத்தை அவமதித்ததாகக் கூறி 18 எம்.எல்.ஏ.,க்களை, ஆறு மாதங்களுக்கு, 'சஸ்பெண்ட்' செய்து காதர் உத்தரவிட்டார்.இதுகுறித்து தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா பேட்டி அளிக்கையில், ''சபாநாயகர் காதர் இப்படி தான் நடந்து கொள்வார் என்று, எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ''தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடக சட்டசபை சபாநாயகரான முஸ்லிம் சமூகத்தின் காதருக்கு, பா.ஜ.,வினர் வணக்கம் போடுகின்றனர் என்று, அமைச்சர் ஜமீர் அகமதுகான் பேசினார். அவர் கூறியதை போல ஆவணத்துடன் காதர் நடந்து கொள்கிறார்,'' என்று கூறி இருந்தார்.இதுதொடர்பாக சட்டசபை உரிமை குழு தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான மஹாந்தேஷ் கவுஜலகியை நேற்று முன்தினம் சட்டசபை ஆளுங்கட்சி கொறடா அசோக் பட்டன் சந்தித்துப் பேசினார்.அப்போது, 'சபாநாயகர் காதரை மத ரீதியாக விமர்சித்த, ஹரிஷ் பூஞ்சாவை எம்.எல்.ஏ., பதவியில் இருந்து உடனே நீக்க வேண்டும். அவருக்கு எந்த சலுகையும் வழங்கக் கூடாது' என, அசோக் பட்டன் கோரினார்.பின், அசோக் பட்டன் அளித்த பேட்டியில், ''சட்டசபையின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதால் 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ''அவர்கள் மன்னிப்பு கேட்டு இருந்தால், சஸ்பெண்ட் உத்தரவை சபாநாயகர் திரும்பப் பெற்று இருப்பார். சபாநாயகரை மத ரீதியாக விமர்சித்து, பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா பேசி உள்ளார். அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.