ஏழைகள் வீடு கட்டும் திட்டம் ரூ.27.50 கோடி முறைகேடு?
பெங்களூரு : ஏழைகள் வீடு கட்டுவதற்காக வழங்கப்பட்ட நிதியில் 27.50 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக மாநகராட்சி நலத்துறையின் உதவி கமிஷனர் மீது புகார் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு மாநகராட்சி 'அம்ருத் மஹோத்சவா' திட்டத்தின் மூலம், ஏழை மக்கள் வீடு கட்டுவதற்காக ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு, குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கும் கீழும், பெங்களூரில் கட்டாயம் 3 ஆண்டுகளும் வசித்திருக்க வேண்டும் என்பது உட்பட பல விதிமுறைகள் உள்ளன. இத்திட்டத்தில், பெங்களூரு மாநகராட்சி நலத்துறையின் உதவி கமிஷனராக பணியாற்றிய நாகபூஷண், தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் 550 பேரின் வங்கிக்கணக்கிற்கு, சட்ட விரோதமாக தலா 5 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதத்தில், 27.50 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் என்.ஆர்.ரமேஷ் நேற்று, மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வரராவிடம் ஆவணங்களுடன் புகார் அளித்தார். இது போன்று ஆவணங்களை லோக் ஆயுக்தா போலீசாரிடமும் சமர்ப்பித்தார்.