பிரச்னை தீர்க்காவிடில் ‘பளார்’ ஆய்வில் நீதிபதி வீரப்பா அதிரடி
கோலார்: நரசாபுரா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில், உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா திடீரென வந்து, ஆய்வு செய்ததில் பல முறைகேடுகள் அம்பலமாயின. கோலார் மாவட்டத்தில் பரவலாக ஊழல் நடக்கிறது. மழை நீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏரியில் கழிவு நீர் கலப்பதாக லோக் ஆயுக்தாவுக்கு, தொடர்ந்து புகார் வந்தது. எனவே, உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா, நரசாபுரா கிராம பஞ்சாயத்து அலுவலகத்திற்கு, நேற்று காலையில் திடீரென ஆய்வு செய்தார். முதலில் ஊழியர்களின் வருகை பதிவேடு புத்தகத்தை, நீதிபதி வீரப்பா பார்வையிட்டார். பலரும் கையெழுத்திடாததை பார்த்து, அதிருப்தி தெரிவித்தார். அதன் பின் பி.டி.ஓ., எனும் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரி முனிராஜுவின் மொபைல் போனை பெற்று, பணம் பரிமாற்றத்தை ஆய்வு செய்தார். பி.டி.ஓ., மற்றும் அவரது மனைவியின் வங்கி அறிக்கையை அனுப்பும்படி உத்தரவிட்டார். பஞ்சாயத்து அலுவலகத்தின், அறிவிப்பு பலகையில், லோக் ஆயுக்தா தொடர்பு எண்கள் இல்லாததை கவனித்து, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். அப்போது, ‘மக்களின் பிரச்னைகளை தீர்க்காமல், காரணம் கூறினால் கன்னத்தில் அறைவேன்’ என்றார்.