காளேன அக்ரஹாரா - தாவரகெரே இன்று மெட்ரோ சோதனை ஓட்டம்
பெங்களூரு: 'இளஞ்சிவப்பு வழித்தடத்தின் காளேன அக்ரஹாரா - தாவரகெரே வரையிலான மெட்ரோ ரயில் பாதையில், இன்று சோதனை ஓட்டம் நடத்தப்படும்' என்று பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: காளேன அக்ரஹாரா - தாவரகெரே இடையே 7.5 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை பணிகள் முடிவடைந்து விட்டன. இன்று துவங்கும் சோதனை ஓட்டம், ஏப்ரல் வரை நடக்கும். இந்த வேளையில், ரயில் வேகம், ரயில் பெட்டிகள், பிரேக், எலக்ட்ரானிக்ஸ் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும். பயணியருக்கு பாதுகாப்பு, நம்பகத்தன்மை வழங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் மெட்ரோ ரயில் நிர்வாகம், மேலும் ஒரு மைல்கல்லை எட்டி உள்ளது. இது தவிர, 21.25 கி.மீ., துாரமுள்ள இளஞ்சிவப்பு வழித்தடத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடியும் போது, பெங்களூரு தெற்கில் உள்ள காளேன அக்ரஹாராவும், வடக்கில் உள்ள நாகவாராவும் இணைக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.