ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தை துவம்சம் செய்த கன்னட அமைப்பினர்
கோரமங்களா : பெங்களூரில் ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தை, கன்னட அமைப்பினர் துவம்சம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. சூதாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், வாலிபர்கள் தலைதெறித்து ஓடினர். பந்தயம் கட்டி விளையாடும் அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளை முழுமையாக தடை செய்ய, கர்நாடக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக புதிய சட்டத்தை அரசு முன்மொழிந்து உள்ளது. 'கேம்ஸ் ஆப் சான்ஸ்' சம்பந்தப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு, அரசு தடை விதித்து உள்ளது. இந்நிலையில் பெங்களூரு கோரமங்களா காவேரி காலனியில் உள்ள, 'கோல்டன் ஏசஸ் போக்கர்' என்ற ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தில், அரசின் தடையை மீறி நேற்று சூதாட்டம் நடந்தது. இளம் பெண் கள், வாலிபர்கள் பங்கேற்றிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த, நம்ம கர்நாடகா சேனை என்ற கன்னட அமைப்பு, சூதாட்ட நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தியது. திடீரென கன்னட அமைப்பினர், சூதாட்ட நிறுவனத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை, அடித்து, உடைத்து துவம்சம் செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்கள், வாலிபர்கள் அங்கிருந்து தலைதெறித்து ஓடினர். நிறுவனத்தை துவம்சம் செய்த பின், கன்னட அமைப்பினரும் அங்கிருந்து சென்று விட்டனர். அரசு உத்தரவை மீறி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு, சூதாட்டம் நடத்தப்படுகிறது. இளம் தலைமுறையினரை தற்கொலைக்கு தள்ளும் இத்தகையை சூதாட்ட நிறுவனங்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கன்னட அமைப்பினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.