பாடகர் சோனு நிகம் சர்ச்சை பேச்சு கன்னட அமைப்பினர் கண்டனம்
பெங்களூரு: கன்னட பாடல் பாடும்படி மாணவர் கேட்டதால், சர்ச்சைக்கு உரிய வகையில் பேசிய பாலிவுட் பாடகர் சோனு நிகமை, கன்னட அமைப்பினர் கண்டித்தனர்.பெங்களூரின், ஈஸ்ட் பாயின்ட் கல்லுாரியில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் பின்னணி பாடகர் சோனு நிகம் பங்கேற்றார். தொடர்ந்து ஹிந்தி பாடல்களை பாடினார். அப்போது மாணவர் ஒருவர், கன்னட பாடல் பாடும்படி கூச்சலிட்டார்.பாடலை பாதியில் நிறுத்திய சோனு நிகம், தனக்கு கன்னடம் மீதான பற்று, இங்குள்ள மக்கள் காட்டும் அன்பு குறித்து, உருக்கமாக விவரித்தார்.மேலும், 'என் தொழில் வாழ்க்கையில், நான் பல மொழிகளில் பாடி உள்ளேன். இவற்றில் நான் பாடிய அற்புதமான பாடல்கள், கன்னடத்தில் உள்ளன.'நான் கர்நாடகாவுக்கு வரும் போது, என்னை உங்கள் குடும்பத்தினரை போன்று நடத்துகிறீர்கள். 'எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், கன்னடத்தில் சில வரிகளாவது பாடுகிறேன். இப்போது மாணவர், கன்னடம், கன்னடம் என, கூச்சல் போடுவது எனக்கு பிடிக்கவில்லை.'இதே காரணத்தால் தான், பஹல்காமில் தாக்குதல் நடந்துள்ளது' என்றார்.சோனு நிகம் பேச்சை கன்னட அமைப்பினர், கடுமையாக கண்டித்தனர். 'மாணவர் கன்னட பாடல் பாடும்படி கேட்டதற்கும், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கும் என்ன சம்பந்தம்.'இவரை கன்னட திரையுலகில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.'போலீசார் தாமாக முன் வந்து, புகார் பதிவு செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.