உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கையர், தேவதாசிகள் கணக்கெடுப்பு

கர்நாடகாவில் நாட்டிலேயே முதன்முறையாக திருநங்கையர், தேவதாசிகள் கணக்கெடுப்பு

பெங்களூரு: நாட்டிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் திருநங்கையர், முன்னாள் தேவதாசிகளை கணக்கெடுக்கும் பணி, வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது. கர்நாடகாவில் தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுள்ளது. முன்னாள் தேவதாசிகளாக இருந்த பெண்கள், தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பது பற்றி அரசின் கவனத்திற்கு சென்றது. இதுபோல திருநங்கையரின் வாழ்வாரத்தை மேம்படுத்தவும் அரசு முடிவு செய்தது. இதனால் கர்நாடகாவில் முன்னாள் தேவதாசிகள், திருநங்கையர் எத்தனை பேர் இருக்கின்றனர் என்று, கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இதன்படி வரும் 15ம் தேதி முதல் பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், ராய்ச்சூர், கொப்பால், தார்வாட், ஹாவேரி, கதக், கலபுரகி, யாத்கிர், சித்ரதுர்கா, தாவணகெரே, ஷிவமொக்கா, பல்லாரி, விஜயநகரா ஆகிய 15 மாவட்டங்களில் வசிக்கும் முன்னாள் தேவதாசிகள், திருநங்கையர் குறித்த கணக்கெடுப்பை 45 நாட்களுக்குள் முடிக்கவும் அரசு உத்தரவிட்டு உள்ளது. இக்கணக்கெடுப்பு திருநங்கையர், முன்னாள் தேவதாசிகளின் சமூக, பொருளாதார, கல்வி மறுவாழ்வு நடவடிக்கையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. முன்னாள் தேவதாசி பெண்கள் குறித்து தேவதாசிகள் நலனுக்காக பாடுபடும் அமைப்புகளும், திருநங்கையர் நலனுக்காக பாடுபடும் அமைப்புகளும் கணக்கெடுப்பு நடத்த உள்ளன. அனைத்து மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கணக்கெடுப்பில் தங்கள் பெயர்களை பதிவு செய்ய நினைக்கும் திருநங்கையர், முன்னாள் தேவதாசிகள் 1800 599 2025 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும், திருநங்கையர், முன்னாள் தேவதாசிகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது இல்லை. கர்நாடகா தான் முதல் மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்