உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கர்நாடகாவில் உணவகங்களுக்கு புதிய விதிமுறை அமல்

 கர்நாடகாவில் உணவகங்களுக்கு புதிய விதிமுறை அமல்

பெங்களூரு: கர்நாடகாவில், ஹோட்டல், பப், பார் அண்ட் ரெஸ்டாரன்ட் எனும் உணவகத்துடன் கூடிய மதுபான பார்களில் உணவு தயாரிப்பதில் புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளன. 'இந்த விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்; மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். பெங்களூரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தினர். இதில், பல கிலோ எடையுள்ள கெட்டுப்போன இறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகளை உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, ஹோட்டல்கள், பப், பார் அண்ட் ரெஸ்டாரன்ட்களுக்கு புதிய விதிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் வழங்கி உள்ளனர். உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: உணவு தயாரிப்பவர்கள் சுத்தமான சீருடை, முடி உதிராமல் இருக்கும் வகையிலான தலைக்கவசங்கள், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும். உணவு தயாரிப்பதற்கு தரமான மசாலா, எண்ணெய், காய்கறி, இறைச்சி போன்றவை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். காலாவதியான மற்றும் தரம் குறைந்த பொருட்களை சமையலுக்கு பயன்படுத்தக் கூடாது. உணவு பொருட்களை சேமிக்கும் போது, அவற்றில் ஸ்டிக்கர் ஒட்டி தேதி குறிப்பிடவும். உணவு தயாரிக்கும் பாத்திரங்கள், உபகரணங்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். அசைவ உணவுகளை 4 டிகிரி செல்சியஷுக்கு குறைவாக வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும். சூடான உணவை 60 டிகிரி செல்சியஷுக்கு மேல் பராமரிக்கவும். சைவ, அசைவ உணவுகளை சேமித்து வைப்பதற்கு தனித்தனி பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும். உணவு தயாரிப்பவர்கள் அடிக்கடி உடல்நல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்ட பணியாளர்கள் உணவு தயாரிக்கும் பணியில் ஈடு படக்கூடாது. கடைகளுக்கு 'சீல்' ஒவ்வொரு உணவகத்திலும் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட வேண்டும். உணவை கொண்டு செல்லும் வாகனங்கள் சுத்தமாக இருத்தல் அவசியம். போக்குவரத்தின் போது வெப்ப நிலை கட்டுப்பாடு பராமரிக்கப்பட வேண்டும். சமையல், காய்கறி, இறைச்சியை சுத்தம் செய்வதற்கு குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகள் சுத்தமாக இருக்க வேண்டும். ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் சுத்தமான கழிப்பறை வழங்கப்பட வேண்டும். குப்பை தொட்டிகள் மூடப்பட்டிருக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு உணவகத்திலும் உணவகம் நடத்துவதற்காக உணவு பாதுகாப்புத்துறை வழங்கிய உரிமம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்த அனைத்து விதிமுறைகளையும் ஹோட்டல், பப், பார் அண்ட் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளை மீறினால் சம்பந்தபட்ட நிறுவன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஹோட்டல் உரிமம் ரத்து செய்யப்படும். கடைகளுக்கு 'சீல ் ' வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !