கோலார் விளைநிலங்களில் புகுந்தது கே.சி.வேலி நீர்
கோலார்: கோலார் தாலுகா, குடுவனஹள்ளி கிராமத்தில் கே.சி., வேலி எனும் கோரமங்களா, செல்லகட்டா நீர், கால்வாயில் இருந்து வெளியேறி, விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசப்படுத்தியுள்ளது. பெங்களூரின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு, கோலார் மாவட்டத்தின் ஏரிகளை நிரப்புவதற்காக கே.சி., வேலி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன் விவசாயம் மற்றும் பிற தேவைகளுக்கு நீரை பயன்படுத்த திட்டமிடப்பட்டது. அப்படி கொண்டு வரப்படும் நீர், கால்வாய் மூலம் ஏரிகளில் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், கோலார் தாலுகா, குடுவனஹள்ளி கிராமத்தின் வழியே செல்லும் கே.சி., வேலி திட்ட கால்வாயில் நாணல், படர் தாமரை, கள்ளிச்செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இதனால், ஏரிகளுக்கு தண்ணீர் செல்வது தடைபட்டுள்ளது. இந்த அடைப்பு காரணமாக, எஸ்.அக்ரஹாரா, ஜனகட்டா, முதுவாடி ஏரிகளுக்கு பாய்வதற்கு வழியில்லாமல் கால்வாயில் இருந்து வெளியேறி வருகிறது. கால்வாயை ஒட்டியுள்ள குடுவனஹள்ளி விளைநிலங்களுக்குள் கால்வாய் தண்ணீர் பாயத்தொடங்கியது. பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கேழ்வரகு உள்ளிட்ட விளை நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வயல்களில் புகுந்துள்ள நீர், குடுவனஹள்ளி கிராமத்துக்குள்ளும் புகுந்துவிடுமென கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். கே.சி., வேலி கால்வாயின் பல இடங்களிலும் களைச் செடிகள் முளைத்து, அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சீனிவாசப்பூர் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., வெங்கட் ஷிவா ரெட்டி கூறியதாவது: இதற்கு முன்பும் இதே போன்ற பிரச்னை ஏற்பட்டது. அப்போதே இதுகுறித்து பொறியாளர்கள் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ஆனால் செய்ய தவறிவிட்டனர். கே.சி.வேலி நீரால் சீனிவாசப்பூர் தொகுதியிலும் வெள்ள அபாயம் உள்ளது. தொழில்நுட்ப பொறியாளர்கள், கே.சி.வேலி நீர் பாயும் கால்வாய்களை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க விரைந்து கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.