அனைவரும் ஒருங்கிணைந்து போராட கார்கே அழைப்பு
பெங்களூரு: ''நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார்.இவ்விஷயத்தில் இணைந்து செயல்பட்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எளிதாக இருக்கும். தேசிய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்,'' என்று, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், பீஹார் மாநிலத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் உரை ஆற்றுகிறார்.அவரது இந்த அணுகுமுறை சரியில்லை. பீஹாருக்கு சென்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் பேசுவதற்கு பதில் இங்கு வந்து நிலைமையை விளக்கி இருக்க வேண்டும்.பஹல்காம் தாக்குதலில் என்ன நடந்தது, யார் பொறுப்பு, பாதுகாப்பு குறைபாடு இருந்ததா, உளவுத்துறை குறைபாடு இருந்ததா, தகவல் குறைபாடு இருந்ததா என்பது பற்றி அனைத்து கட்சியினருக்கும் விளக்கமாக சொல்லி இருக்க வேண்டும்.அனைத்து கட்சி கூட்டத்திற்கு தலைமை வகித்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நான் குறை சொல்லவில்லை.பஹல்காம் தாக்குதல் பாதுகாப்பு குறைபாடு என்று, மத்திய அரசு ஒப்பு கொண்டு உள்ளது. இதை ஒரு சவாலாக எடுத்து கொள்ள வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கூறி உள்ளோம். யார் மீது தவறு என்பதை கண்டுபிடிக்க இது நேரம் இல்லை. பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து உள்ள முடிவு நாட்டிற்கு நல்லது. நாட்டின் நலனுக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். மத்திய அரசுக்கு ஆதரவு வழங்க நாங்கள் தயார். அவர்களை எங்களையும் நம்பிக்கையில் எடுத்து கொண்டால், அடுத்தகட்ட நடவடிக்கைகள் எளிதாக இருக்கும்.அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது பற்றி வெளியே சொல்ல முடியாது. தேசிய பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.