ஒரு பீடிக்காக நண்பரை கொலை செய்தவர் கைது
துமகூரு: ஒரேயோரு பீடிக்காக நடந்த சண்டையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவரை, போலீசார் கைது செய்தனர். துமகூரு மாவட்டம், சிக்கநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் சிவராஜ், 29, மற்றும் தாதாபீர், 24. நண்பர்களாகிய இருவரும் கடந்த 13ம் தேதி இரவு ஒன்றாக மது அருந்தினர். சிவராஜ், தாதாபீரிடம் ஒரு பீடி தரும்படி கேட்டார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தாதாபீர், பெரிய கருங்கல்லால் சிவராஜின் தலையில் பலமாக தாக்கி, அவரது தலையை நசுக்கி கொலை செய்தார். அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரது உடல், கடந்த 14ம் தேதி காலை கண்டெடுக்கப்பட்டது. இவ்வழக்கை சிக்கநாயக்கனஹள்ளி போலீசார் விசாரித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளை சோதனை செய்ததில் கொலை செய்து தாதாபீர் தப்பிஓடுவது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து, அவரை கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக போலீசார் சோதனை செய்தனர். இருப்பினும், அவரை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக பாழடைந்த வீட்டில் தங்கியிருந்த தாதாபீரை நேற்று போலீசார் கைது செய்து உள்ளார். கொலை செய்ததை அவர் போலீசாரிடம் ஒப்புக்கொண்டு உள்ளார்.