கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலம் மூடல்
பெங்களூரு: கே.ஆர்.மார்க்கெட் மேம்பால சாலை, மூன்று மாதங்களுக்கு மூடப்படுகிறது. பொதுமக்கள், வாகன பயணியர் மாற்று சாலையை பயன்படுத்தும்படி, ஜி.பி.ஏ., எனும், கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரின், கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலத்தில் இருந்து சாம்ராஜ்பேட்டுக்கு இணைப்பு ஏற்படுத்தும், சுல்தான் சாலையில் ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன. பணிகளின் தரத்தை அதிகரிப்பதுடன், மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, கே.ஆர்.மார்க்கெட் மேம்பாலம் மூடப்படுகிறது. இப்பாதையில் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடியும் வரை விக்டோரியா மருத்துவமனை, மிண்டோ, வாணி விலாஸ் மருத்துவமனைகள், சாம்ராஜ்பேட், பசவனகுடி பகுதிகளுக்கு செல்லும் வாகன பயணியருக்கு பாதிப்பு ஏற்படலாம். பொதுமக்கள், வாகன பயணியர் மாற்று பாதையை பயன்படுத்த வேண்டும். மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில், விதிமீறலாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பணிகளுக்கு இடையூறாக இருப்பதால், அனைத்து கடைகளும் அகற்றப்பட்டன. பணிகளை விரைந்து முடித்த பின், மேம்பாலத்தில் போக்குவரத்துக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நடைபாதையில் இருந்த 233 கடைகள் அகற்றப்பட்டதாக, ஜி.பி.ஏ., அதிகாரிகள் கூறினர்.