உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கே.ஆர்.புரம் – தொட்டேனகுந்தி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

கே.ஆர்.புரம் – தொட்டேனகுந்தி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பெங்களூரு: பெங்களூரின் கே.ஆர்.புரம் – தொட்டேனகுந்தி இடையில், 6 கி.மீ., மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. பெங்களூரு சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து விமான நிலையம் வரை, 58.19 கி.மீ., துாரத்திற்கு, மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடக்கிறது. முதற்கட்டத்தில் சென்ட்ரல் சில்க் போர்டில் இருந்து, கே.ஆர்.புரம் வரையில் பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த பாதையில், ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாதையில் மெட்ரோ ரயிலின், முதற்கட்ட சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. பையப்பனஹள்ளி பணிமனையில் இருந்து வரவழைக்கப்பட்ட மெட்ரோ ரயில், கே.ஆர்.புரத்தில் இருந்து சரஸ்வதிநகர், டி.ஆர்.டி.ஓ., ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் ரயில் நிலையம் வழியாக தொட்டேனகுந்தி ரயில் நிலையத்தை அடைந்தது. பின், அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா அளித்த பேட்டி: சில்க் போர்டு – கே.ஆர்.புரம் வரை ‘2ஏ’ என்றும், சரஸ்வதிநகர் – விமான நிலையம் வரை ‘2பி’ என்றும் திட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், 2ஏ பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. ‘ 2பி’யில் பணிகள் மெதுவாக நடக்கின்றன. பணிகளை விரைவுப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இன்று சோதனை ஓட்டம் நடத்தியது பெரிய மைல்கல். வரும் நாட்களில் 2ஏ பாதையில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடையில், சோதனை ஓட்டம் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ