லால்பாக் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
பெங்களூரு: சுதந்திர தினத்தை முன்னிட்டு, பெங்களூரு லால்பாக்கில், 220வது மலர் கண்காட்சி, நாளை துவங்கி, 17ம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. பெங்களூரு லால்பாக் பூங்காவில் உள்ள தோட்ட கலை துறை தகவல் மையத்தில், தோட்ட கலை துறை செயலர் கிரிஷ் நேற்று அளித்த பேட்டி: சுதந்திர தினத்தை முன்னிட்டு, லால்பாக் பூங்காவில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை 12 நாட்கள், மலர் கண்காட்சி நடக்கிறது. இது லால்பாக்கில் நடக்கும், 220வது மலர் கண்காட்சி ஆகும். இந்த மலர் கண்காட்சி, கங்கர் அரச வம்சத்தினருக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களின் ஆட்சி சிறப்புகள், பூக்கள் மூலமாக மக்களுக்கு விவரிக்கப்படும். மேற்கு கங்க வம்சத்தினர் 4ம் நுாற்றாண்டு முதல் 10ம் நுாற்றாண்டு வரை, கர்நாடகாவின் பெரும் பகுதிகளை ஆண்டுள்ளனர். 36.25 லட்சம் மலர்கள் மலர் கண்காட்சியில் லால்பாக் பூங்காவின் கண்ணாடி மாளிகையில், 1,300 ஆண்டுகள் வரலாறு கொண்ட பிரசித்தி பெற்ற பேகூர் பஞ்சலிங்கேஸ்வரா கோவில், பூக்களால் வடிவமைக்கப்படும். கோமதீஸ்வரர் சிலை உட்பட கங்க வம்ச மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளும் காட்சிப்படுத்தப்படும். மலர் கண்காட்சிக்காக 36.25 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. உலகெங்கிலும் இருந்து கார்னேஷன், ஆந்துாரியம், ஆர்க்கிட், ஜெர்பரா, அசேலியா, சால்வியா உட்பட, 110க்கும் மேற்பட்ட மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இத்தகைய சிறப்புகளை கொண்ட மலர் கண்காட்சியை, முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, கிருஷ்ணபைரே கவுடா, சிக்பேட் பா.ஜ., எம்.எல்.ஏ., உதய் கருடாச்சார் ஆகியோர், காலை 11:00 மணிக்கு துவக்கி வைக்கின்றனர். பெங்களூரு தெற்கு பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். ரூ.100 கட்டணம் தினமும் காலை 9:00 மணி முதல், மாலை 6:30 மணி வரை மலர் கண்காட்சி நடக்கும். கடந்த முறை, 9 லட்சம் பேர் பார்வையிட்டனர். இம்முறை 10 லட்சம் பேர் வருவர் என எதிர்பார்க்கிறோம். வரும் 8ம் தேதி காலை 11:00 மணிக்கு, லால்பாக்கில் இகெபானா மற்றும் அது சார்ந்த கலைகளின் கண்காட்சி துவங்குகிறது. நடிகை அமுல்யா ஜெகதீஷ், எழுத்தாளர் சுனிதா துவக்கி வைக்கின்றனர். மலர் கண்காட்சி குறித்த பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி, வரும் 10ம் தேதி காலை, 11:00 மணிக்கு லால்பாக் பயிற்சி மையத்தில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றோருக்கு 14ம் தேதி மதியம் 2:30 மணிக்கு பரிசு வழங்கப்படுகிறது. பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் 80 ரூபாய். வார இறுதி, விடுமுறை நாட்களில் 100 ரூபாய் கட்டணம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அனைத்து நாட்களும் 30 ரூபாய் கட்டணம். பள்ளி சீருடையில் வரும் மாணவர்களுக்கு அனுமதி. இலவசம். https://hasiru.Karnataka.gov.inஎன்ற இணைய முகவரியில், டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கேமராக்கள் எடுத்து வர அனுமதி உண்டு. இவ்வாறு அவர் கூறினார். என்னென்ன வசதிகள்? பாதுகாப்பை கருதி, 136 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம் * லால்பாக் கண்ணாடி மாளிகை அருகே அவசர தேவைக்காக புறகாவல் போலீஸ் நிலையம் உருவாக்கம் * ஐந்து தற்காலிக கிளினிக்குகள் திறப்பு * அவசர தேவைக்காக லால்பாக்கின் 4 நுழைவு வாயில் பகுதியிலும் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தம் * லால்பாக்கில் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. * லால்பாக் வளாகத்தில் 25 இடங்களில் குடிநீருக்கு ஏற்பாடு. = வாகனங்களை எங்கு நிறுத்துவது? சொந்த வாகனங்களில் வருவோர், சாந்திநகர் பி.எம்.டி.சி., மல்டிவெலல் பார்க்கிங், டபுள் ரோட்டில் உள்ள ஹாப்காம்ஸ் வளாகம், ஜே.சி.ரோட்டில் உள்ள மல்டிவெலல் பார்க்கிங், அல் அமீன் கல்லுாரி வளாகத்தில் நிறுத்தி கொள்ளலாம். வாகன போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மெட்ரோ ரயிலில் வரலாம். = செய்ய கூடாதவை? * ஸ்நாக்ஸ் எடுத்து வர கூடாது * பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு கூடாது * விலையுயர்ந்த பொருட்கள், நகை அணிந்து வர வேண்டாம் * மலர்களை தொட கூடாது.