மேலும் செய்திகள்
லால்பாக் மலர் கண்காட்சி ஆக., 7ல் துவக்கம்
17-Jul-2025
பெங்களூரு: இம்முறை லால்பாக் பூங்காவில் நடக்கும் சுதந்திர தின மலர் கண்காட்சி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அவர்களின் சாதனைகள், பூக்கள் மூலமாக, மக்களுக்கு தெரிவிக்க, தோட்டக்கலைத் துறை தயாராகிறது. இது குறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பாலகிருஷ்ணா கூறியதாவது: பெங்களூரின் லால்பாக் பூங்காவில் குடியரசு தினம், சுதந்திர தின நாட்களில் மலர் கண்காட்சி நடப்பது வழக்கம். அதே போன்று நடப்பாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் 8 இம்முறை மலர் கண்காட்சி, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அர்ப்பணிக்கப்படும். ஆங்கிலேயர்களுடன் போராடிய கித்துார் ராணி சென்னம்மா, சங்கொல்லி ராயண்ணா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டத்தை, பூக்கள் மூலமாக மக்களுக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம். வரும் 8ம் தேதியன்று மலர் கண்காட்சி துவங்கும். தகவல்கள் லால்பாக் பூங்காவில், குதிரை மீது அமர்ந்து வாள் ஏந்தி போராடும் கித்துார் ராணி சென்னம்மா உருவம், கித்துார் கோட்டை உட்பட, அவர் தொடர்புடைய அனைத்தும் பூக்களால் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. அதேபோன்று சங்கொல்லி ராயண்ணாவின் உருவம், போராட்டங்கள் பூக்களால் விவரிக்கப்படும். கித்துார் மற்றும் சங்கொல்லிக்கு சென்று சென்னம்மா, ராயண்ணா பிறந்த இடம், சமாதி, வாழ்ந்த இடங்களை பார்த்து வந்துள்ளோம். அங்கு வசிக்கும் மக்களிடமும், பல இடங்களில் வரலாற்று வல்லுநர்களிடம் தகவல்கள் கேட்டறிந்தோம். கித்துார் சமஸ்தானத்தின் ராணியாக இருந்தவர் சென்னம்மா. பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்து போராடியவர். கித்துார் சமஸ்தானத்தை பிரிட்டிஷார் கைப்பற்ற முயற்சித்த போது, தன் படைக்கு தலைமை வகித்து போராட்டம் நடத்தியவர். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து வீரத்துடன் போராடிய பெண் அரசிகளில் இவரும் ஒருவர். கர்நாடகாவில் சுதந்திர தினத்தன்று அவரை நினைவுகூருவோம். சங்கொல்லி ராயண்ணா, சுதந்திர போராட்ட வீரர். 19ம் நுாற்றாண்டு ஆரம்பத்தில், சென்னம்மா ஆட்சி நடத்திய கித்துார் படையில் தலைமை சேனாதிபதியாக இருந்தவர். இந்திய சுதந்திர போராட்டத்தில், இவருக்கும் முக்கிய பங்குள்ளது. அவரை நினைவு கூரும் வகையில், பெலகாவியில் அவரது சிலை நிறுவப்பட்டது. நடப்பாண்டு 2 கோடி ரூபாய் செலவில், மலர் கண்காட்சி ஏற்பாடு செய்யப்படுகிறது. வழக்கம் போன்று இம்முறை மலர் கண்காட்சியில், ஆந்தோரியம், ரோஜா, ஜர்பேரா, ஆர்க்கிட் உட்பட பல்வேறு பூக்கள் இடம் பெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
17-Jul-2025