உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ரூ.3.50 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார் பறிமுதல்

 ரூ.3.50 கோடி மதிப்பிலான லம்போர்கினி கார் பறிமுதல்

பெங்களூரு: போலி ஆவணங்கள் கொடுத்து ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான, லம்போர்கினி கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. பெங்களூரு எலஹங்காவில் உள்ள ஹர்ஷா இன்ப்ரா கன்ஸ்டிரக் ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவன உரிமையாளர் ஹர்ஷா. இவர் 2022 ம் ஆண்டு 3.50 கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி காரை வாங்கினார். அந்த காரை தற்காலிகமாக தெலுங்கானா ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பதிவு செய்தார். பெங்களூரில் காரை பயன்படுத்தினார். பெங்களூரு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் காரை பதிவு செய்யாமல் இருந்தார். பின், கொடிகேஹள்ளியில் உள்ள ஹெச்1 கார் என்ற நிறுவனத்தில் காரை விற்றார். இந்நிறுவனம் போலி ஆவணங்களை கொடுத்து காரை பதிவு செய்து, இன்னொரு நபருக்கு விற்றது. இதன்மூலம் 36 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் கண்டுபிடித்தனர். காரை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கார் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 13 ம் தேதி குடகில் இருந்து பெங்களூருக்கு கார் வருவது பற்றி ஆர்.டி.ஓ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மடிகேரி - மைசூருக்கு இடைப்பட்ட பகுதியில் காரை நிறுத்திய போது அகில் என்பவர் காரை ஓட்டியது தெரிந்தது. அவரிடம் காரின் ஆவணங்களை கேட்ட போது, நெஞ்சு வலிப்பதாக கூறி ஆர்.டி.ஓ., அதிகாரிகளை ஏமாற்றிவிட்டு காருடன் அங்கிருந்து தப்பினார். பின், ஹெச்1 நிறுவனத்திற்கு வந்து காரை நிறுத்தினார். இந்நிறுவனம் காரை தனது அலுவலகத்தின் தரைதள பகுதியில் மறைத்து வைத்திருந்தது. இதுபற்றி அறிந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு, அங்கு சென்று காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி