எல் அண்டு டி நிறுவனம் கருப்பு பட்டியலில் சேர்ப்பு?
கலபுரகி : 'எல் அண்டு டி' நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து நகராட்சி ஆணையர் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.கலபுரகி மாவட்டத்தில் உள்ள மக்களின் வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் 'எல் அண்ட் டி' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த திட்டம் பல மாதங்கள் ஆகியும், மெத்தனமாக நடந்து வருவதாகவும், ஒழுங்காக தண்ணீர் சப்ளை செய்யவில்லை எனவும் மக்கள் புகார் கூறி வந்தனர்.இந்நிலையில், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம் குறித்து, நேற்று கலபுரகி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆலோசனை நடந்தது. இதில், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான பிரியங்க் கார்கே, மாவட்ட கலெக்டர் பவுசியா தரணம், நகராட்சி கமிஷனர் அவினாஷ் ஷிண்டே மற்றும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.பிரியங்க் கார்கே கூறியதாவது:குடிநீர் வழங்கும் திட்டத்தில் எல் அண்ட் டி நிறுவனம் மெத்தனமாக செயல்படுகிறது. இதனால், மக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பிட்ட நேரத்தை கடந்தும், தண்ணீர் சப்ளை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. பணிகளை மேற்பார்வையிட வேண்டிய மாநகராட்சி அதிகாரிகள், தலைமை பொறியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். இத்திட்டத்திற்காக அரசு பல கோடி ரூபாய் செலவழித்து உள்ளது. இருப்பினும், பணிகள் குறித்த நேரத்திற்குள் முடிக்கவில்லை.எனவே, எல் அண்ட் டி நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து, நகராட்சி ஆணையர் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.