நுாலக ஊழியர் தற்கொலை: பெண் பி.டி.ஓ., மீது வழக்கு
தாபஸ்பேட்: பெங்களூரு அருகே, நுாலக மேற்பார்வையாளர் தற்கொலை செய்து கொண்டார். சம்பளம் கொடுக்காமல் துன்புறுத்தியதாக, பெண் பி.டி.ஓ., மீது வழக்குப் பதிவாகி உள்ளது. பெங்களூரு ரூரல் நெலமங்களா தாலுகா கலலுகட்டா கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் நுாலகம் உள்ளது. ராமசந்திரய்யா, 50, என்பவர், பகுதிநேர மேற்பார்வையாளராக பணியாற்றினார். இவருக்கு கடந்த மூன்று மாதங்களாக, பி.டி.ஓ., கீதாமணி சம்பளம் வழங்கவில்லை. வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் கொடுக்கவில்லை. 'வேலைக்கு நீங்கள் தேவை இல்லை' என்று கூறி தொந்தரவு கொடுத்துள்ளார். மனம் உடைந்த ராமசந்திரய்யா நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராமசந்திரய்யா குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து, தியாமகொண்டலு போலீசார், கீதாமணி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.