டில்லி போல பெங்களூரிலும் காற்று மாசு அதிகரிப்பு!: கட்டட பணி விதிமீறல்களால் மக்கள் பாதிப்பு
பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மக்கள்தொகையை விட, வாகனங்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வாகனங்கள் உமிழும் கரும்புகையால் காற்று மாசடைந்துள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, மூச்சுத்திணறல், அலர்ஜி உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதுதொடர்பாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பல முறை எச்சரித்துள்ளனர். எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை, அரசு ஊக்குவிக்கிறது.இதற்கிடையே சட்டவிரோத கட்டுமான பணிகள், நகரில் காற்று மாசுவை அதிகரிக்க செய்கின்றன. புதிய கட்டடங்கள் கட்டுவது, பழைய கட்டடங்களை இடிப்பது தொடர்பாக, கர்நாடக மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம், விதிகளை வகுத்துள்ளது.கட்டடங்களை இடிக்கும்போது, துாசி எழுந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பணிகள் நடக்கும் இடத்தை மூட வேண்டும். அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும் என்பது உட்பட, பல விதிகளை வகுத்துள்ளது. ஆனால் இந்த விதிகளை, கட்டுமான ஒப்பந்ததாரர்கள் பின்பற்றுவது இல்லை. தனியார் மட்டுமின்றி, அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களே விதிகளை மீறுகின்றனர். சாலைகள், நடைபாதைகளில் நடக்கும் பணிகள் மற்றும் சாலையோரப் பணிகளால், பெங்களூரின் பல்வேறு பகுதிகள் துாசி மயமாகி உள்ளன. அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள், வாகன பயணியர் திணறுகின்றனர்.சர்ஜாபுரா, எலஹங்கா, மாரத்தஹள்ளி, பேட்ராயனபுரா, மைசூரு சாலை, மாகடி சாலை என, நகரில் கட்டுமான பணிகள் நடக்காத இடங்களே இல்லை என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக துாசி ஆளுயரத்துக்கு பறந்து, சாலையில் செல்வோர் முகத்தில் படர்கிறது.கட்டுமான துாசியால் சாலைகள் மூடப்படுகிறது. இத்தகைய சாலைகளில் தான் ஏராளமான கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள் உள்ளன. இதே சாலைகளில் தினமும், லட்சக்கணக்கான மக்கள் நடமாடுகின்றனர். மாசு படர்ந்த காற்றை சுவாசிக்கின்றனர்.டில்லியில் காற்று மாசுவால், மக்கள் எந்த அளவுக்கு பாதிப்படைந்தனர் என்பது, அனைவருக்கும் தெரியும். தற்போது பெங்களூரிலும், காற்று அளவுக்கு அதிகமாக மாசு அடைகிறது. இதே சூழ்நிலை தொடர்ந்தால் பெங்களூரு, மற்றொரு டில்லியாகும் நாட்கள் வெகு துாரத்தில் இல்லை என, சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.சட்டவிரோத கட்டுமான பணிகளுக்கு, கடிவாளம் போடுவதுடன், காற்று மாசுபடுவதை தடுக்கவும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:அரசு மற்றும் தனியார் சார்பில் கட்டுமான பணிகள் நடக்கும்போது, துாசி எழாமல் தண்ணீர் தெளிக்க வேண்டும். சுற்றிலும் மூடிக்கொண்டு, பணிகளை நடத்துவதன் மூலம், துாசி எழுவதை தடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.கட்டட உரிமையாளர்கள், விதிகளை பின்பற்றுகின்றனரா என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் 2018ல் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் எங்களிடம் ஊழியர் பற்றாக்குறை உள்ளதால், பணிகள் நடக்கும் இடங்களை ஆய்வு செய்ய முடியவில்லை. சில நாட்களாக பெங்களூரில் மழை பெய்வதால், மாசு அளவு கட்டுக்குள் உள்ளது. மாசு அதிகரிக்காமல் தடுக்க, நடவடிக்கை எடுப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.பயனில்லை!பெங்களூரின் பல்வேறு சாலைகள் துாசி மயமாக உள்ளன. இதற்கு முன்பு, நான் சர்ஜாபுராவில் வசித்தேன். அங்கு சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. காற்று மாசு அதிகம். துாசி உயரமாக பறக்கும். அங்கு வசிப்பது, மிகவும் கஷ்டமாக இருந்ததால், சமீபத்தில் பேட்ராயனபுராவுக்கு குடிபெயர்ந்தேன். ஆனால் இப்பகுதியும் அப்படித்தான் உள்ளது. துாசியும், மாசும் அதிகமாகவே உள்ளது. எங்கு பார்த்தாலும் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இது சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதுகுறித்து, நாங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்தும் பயனில்லை.தேவிகா,ஐ.டி., நிறுவன ஊழியர்,பேட்ராயனபுரா
சட்டவிரோத கட்டுமானம் அகற்றம்
மஹாதேவபுராவின், ஏ.இ.சி.எஸ்., லே - அவுட் சி பிளாக், முதலாவது பிரதான சாலையில், பாஸ்கர் ராவ் என்பவர், புதிதாக ஆறு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டியுள்ளார். ஆனால் இவர் ஆறு மாடிகள் கட்டடம் கட்ட, மாநகராட்சியிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை. இதையறிந்த மாநகராட்சி அதிகாரிகள், கட்டட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர். பணிகளை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.ஆனால் அவர் பணிகளை நிறுத்தாமல் முடித்துவிட்டார். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை அங்கு வந்து, இடத்தை ஆய்வு செய்தனர். நான்கு மாடிகளுக்கு அனுமதி பெற்று, கூடுதலாக இரண்டு மாடிகள் கட்டுவது தெரிந்தது. எனவே கூடுதலாக கட்டிய இரண்டு மாடிகளை, அதிகாரிகள் இடித்துத் தள்ளினர். இதற்கான செலவை, கட்டட உரிமையாளரிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.