மாடலிங்கில் சிறுமி சாதனை
வெற்றி என்பது, வயதால் வருவது அல்ல. கடுமையான உழைப்பால் மட்டுமே வெற்றி தேடி வரும். உழைத்தால் நாம் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்பதற்கு உதாரணமாக பலர் வாழ்கின்றனர். இவர்களில் ஆத்யா சாலியானும் ஒருவர். சாதனைக்கு வயது தடையல்ல என்பதற்கு, இவர் சிறந்த உதாரணம். சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவில் வசிப்பவர் ஆத்யா சாலியான், 16, மாடலிங் துறையில் பல சாதனைகள் செய்துள்ளார். கடந்தாண்டு மடிகேரி மற்றும் பெங்களூரில் நடந்த அழகுப்போட்டியில் பங்கேற்று பரிசு பெற்றார். சமீபத்தில் தமிழகத்தில் நடந்த, 'மதராசி யூனிவர்சல்' என்ற பெயரில் மாடலிங் போட்டியில் பங்கேற்ற ஆத்யா, அனைவரும் வியக்கும் வகையில் நடை போட்டு, கைத்தட்டல் பெற்றார். அது மட்டுமின்றி, 'மிஸ் டீன் ஆப் தமிழ்நாடு 2025' பட்டத்தையும் பெற்றுள்ளார். ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்துக்கு சென்று, சாதனை செய்வது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஆனால் ஆத்யா தன் திறமையால், கர்நாடகாவின் சிக்கமகளூரில் இருந்து தமிழகத்துக்கு சென்று, சாதனை செய்துள்ளார். வரும் நாட்களில் இந்த சிறுமி, மேலும் பல சாதனைகள் செய்ய வேண்டும் என, பலரும் வாழ்த்துகின்றனர். வரும் நாட்களில் கோவாவில் நடக்கும் அழகி போட்டியில் பங்கேற்க தன்னை தயார் படுத்துகிறார். இவரது சாதனைக்கு, இவரது குருவான மது சந்தப்பா, உறுதுணையாக இருக்கிறார். எதிர்காலத்தில் சர்வதேச அளவிலான அழகி போட்டிகளில் பங்கேற்பது, ஆத்யாவின் குறிக்கோள். - நமது நிருபர் -