எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வயது வரம்பு தளர்வில்லை
பெங்களூரு: 'நடப்பாண்டு கல்வியாண்டில் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் சேரும் மாணவர்களின் வயது வரம்பில் மாற்றம் இல்லை' என மாநில கல்வி துறை அறிவித்து உள்ளது.நாட்டில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு கர்நாடகாவில் பெற்றோர் மத்தியில் அதிருப்தி எழுந்தது. வயதில் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்தி வந்தனர்.இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன், '2025 - 26ம் ஆண்டுக்கான முதலாம் வகுப்பு மாணவர்களின் வயது வரம்பை, 6 வயதில் இருந்து 5 ஆண்டு 5 மாதங்கள் என்று மாநில அரசு தளர்த்தி உத்தரவிட்டிருந்தது. இதற்கு பெற்றோர் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதேவேளையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்பில் மாணவர் சேர்க்கை வயதிலும் தளர்வு அறிவிக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதற்கு மாநில கல்வி துறை, 'எல்.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு 4 வயதும்; யு.கே.ஜி.,யில் சேரும் மாணவர்களுக்கு 5 வயதும் கண்டிப்பாக முடிந்திருக்க வேண்டும்.'இதை மாநிலத்தின் அனைத்து மாவட்ட டி.டி.பி.ஐ., எனும் பொது கல்வி துணை இயக்குநர், பி.இ.ஓ., எனும் பிளாக் கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டு உள்ளது.