சுற்றுச்சூழலை மாசுபடுத்திய தொழிற்சாலைக்கு பூட்டு
கொப்பால்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி, செயல்பட்டு வந்த குற்றச்சாட்டின்படி, பிரபலமான 'கல்யாணி ஸ்டீல்ஸ் லிமிடெட்' தொழிற்சாலையை மூடும்படி, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கொப்பால் நகரின், கினிகேரியில் கல்யாணி ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை உள்ளது. இது மிகவும் பிரபலமானதாகும். இந்த தொழிற்சாலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி, செயல்பட்டு வந்தது. இதன் விளைவாக சுற்றுச்சூழல் மாசடைந்தது. மக்கள் வசிக்க தகுதியற்ற சூழ்நிலை உருவானது. தங்களால் வசிக்க முடியவில்லை. ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது என, மத்திய மாசுக்கட்டுப்பாட்டு ஆணையத்தில், புகார் அளித்தனர். இது குறித்து, ஆய்வு செய்த போது, அந்த நிறுவனம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை மீறியது தெரிந்தது. எனவே தொழிற்சாலையை மூடும்படி, மத்திய மாசுக்கட்டுப்பாடு ஆணையம், ஜூலை 3ம் தேதியன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி நடவடிக்கை எடுத்த கொப்பால் மாவட்ட கலெக்டர் சுரேஷ் இட்னால், தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்கும்படி உத்தரவிட்டார். மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி, 'ஹெஸ்காம்' அதிகாரிகள் நேற்று முன் தினம் மின் இணைப்பை துண்டித்தனர்.