உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / பஸ்களில் சத்தமாக பாடல் சக பயணியருக்கு தொந்தரவு

பஸ்களில் சத்தமாக பாடல் சக பயணியருக்கு தொந்தரவு

பெங்களூரு: பஸ்களில் பயணியருக்கு தொந்தரவு ஏற்படும் வகையில், மொபைல் போனில் பாடல்கள், செய்திகளை கேட்கக்கூடாது என்று விதிகள் இருந்தும், பலரும் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஸ்களில் பயணம் செய்யும்போது, தங்கள் மொபைல் போனில் சிலர் சத்தமாக பாடல், செய்திகள் கேட்கின்றனர். பலரும் 'ரீல்ஸ்' பார்க்கின்றனர். இதனால் மற்ற பயணியருக்கு தொந்தரவு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, பஸ்களில் பயணம் செய்யும்போது, யாரும் மொபைல் போனில் பாட்டு அல்லது செய்திகளை சத்தமாக கேட்கக் கூடாது. ரீல்ஸ் வீடியோ பார்க்கக் கூடாது என, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை பலரும் பொருட்படுத்துவதில்லை. இப்போதும் கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி., பஸ்களில் சத்தமாக பாட்டு கேட்கின்றனர். குறிப்பாக வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பஸ்களில், இத்தகைய தொந்தரவு அதிகம். சத்தமாக பாடல், ரீல்ஸ் பார்ப்பதை நடத்துநர்களோ, ஓட்டுநர்களோ கண்டுகொள்வது இல்லை. ஒருவேளை இவர்கள் கண்டித்தாலும், பயணியர் கேட்பது இல்லை. இதுகுறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., நடத்துநர் கோபால் கூறியதாவது: போக்குவரத்துக்கழக பஸ்களில் பயணியர், மொபைல் போனில் சத்தமாக பாடல் கேட்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பயணியருக்கு தெரிவித்து அறிவுறுத்தும்படி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. உத்தரவை மீறி சத்தமாக பாடல் கேட்டாலோ, ரீல்ஸ் பார்த்தாலோ அந்த பயணியரை பஸ்சில் இருந்து, கீழே இறக்கி விட எங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாங்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறோம். சத்தமாக பாடல் கேட்கும் பயணியரை, நாங்கள் பஸ்சில் இருந்து இறக்குவது இல்லை. எங்களின் உணர்வை பயணியர் தாங்களாகவே புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பஸ்களில் மொபைல் போனில், சத்தமாக பாடல் கேட்டால், சம்பந்தப்பட்ட பயணியர் மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் இடம் உள்ளது. சக பயணியருக்கு தொந்தரவு ஏற்படாமல், 'இயர் போன் பயன்படுத்தட்டும். மற்றவருக்கு தொந்தரவு ஏற்படாமல், விதிகளை கடுமையாக செயல்படுத்தும்படி, போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். - ராமலிங்கரெட்டி, மாநில அமைச்சர், போக்குவரத்துத் துறை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை