புலிகள் சரணாலயமாக மாறும் மலை மஹாதேஸ்வரா மலை
பெங்களூரு : ''மலை மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இப்பகுதியை புலிகள் சரணாலயமாக விரைவில் அறிவிக்கும் பணியில் ஈடுபடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார்.சாம்ராஜ்நகர் மாவட்டம், மலை மஹாதேஸ்வரா மலையில், நான்கு குட்டிகள், ஒரு தாய் புலி என ஐந்து புலிகள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. இதுதொடர்பாக, விகாஸ் சவுதாவில் வனத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது அவர் பேசியதாவது:மலை மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், இப்பகுதியை புலிகள் சரணாலயமாக விரைவில் அறிவிப்பதற்காக ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.வன விலங்குகள் இயற்கைக்கு மாறாக மரணம் அடைவதையும், விலைமதிப்பில்லா உயிர்கள் பலியாவதையும் தடுக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள். இதற்கான பொறுப்பை மண்டல அதிகாரிகள், ஊழியர்கள் ஏற்க வேண்டும்.மாநிலத்தில் 40 ஆயிரம் சதுர கி.மீ., வனப்பகுதியை வன ஊழியர்கள் கண்காணிப்பது சாத்தியமில்லை. எனவே, வன விலங்குகள் வேட்டைக்காரர்கள், சட்ட விரோத ஆக்கிரமிப்புகள், மரங்கள் வெட்டுவதை தடுக்க, செயற்கை நுண்ணறிவு வசதியை ஏற்படுத்தி, ட்ரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும். இதை கண்காணிக்க, 'கமாண்ட் சென்டர்' அமைக்கவும்.காலியிடங்களில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் விரைவில் நியமிக்கவும். வனப்பகுதியில் ரோந்து செல்ல வாகனங்கள், உபகரணங்கள் வாங்குவதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.வனப்பகுதியில் உள்ள கிராம மக்களுடன், வன அதிகாரிகள், ஊழியர்கள் நட்புடன் பழக வேண்டும். இங்குள்ள குழந்தைகளுக்கு திறமை பயிற்சி அளித்து, விருதுகள் வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களாகவே, வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்க முன்வருவர்.இவ்வாறு அவர் பேசினார்.