உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆஸ்திரேலியா மாரத்தானில் சாதித்த மாலுாரின் மிதுன்

 ஆஸ்திரேலியா மாரத்தானில் சாதித்த மாலுாரின் மிதுன்

கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவை சேர்ந்த மிதுன், ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் நடந்த மாரத்தானில் பங்கேற்று 42.2 கி.மீ., ஓடி, முதலிடம் பெற்றார். கோலார் மாவட்டம், மாலுார் டவுன் சபை முன்னாள் தலைவர் லட்சுமி நாராயணின் மகன் மிதுன். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். தொழிலை கவனிப்பதுடன், வார இறுதி நாட்களில் அத்லெட்டிக்ஸ் மற்றும் சைக்கிளிங் செய்வது வழக்கம். மாலுாரில் பள்ளி படிப்பை முடித்த மிதுன், ஆர்.வி.கல்லுாரியில் பொறியியல் முடித்தார். விப்ரோ நிறுவனத்தில் 14 ஆண்டுகள், மென் பொறியாளராக பணியாற்றினார். தற்போது, ஆஸ்திரேலியாவில் டெலிகாம் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். சிறு வயதில் இருந்தே, படிப்புடன், விளையாட்டிலும் சிறந்து விளங்கினார். படிப்பு மற்றும் பணி அழுத்தம் காரணமாக, அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. ஆனாலும், ஆர்வம் குறையவில்லை. வெளிநாட்டுக்கு சென்று, பணியில் அமர்ந்த பின் வார இறுதியில் ஓட்டம், சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஆஸ்திரேலியாவின், மெல்போர்னில் நடக்கும் மாரத்தான் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. இதற்காக நேரம் கிடைக்கும் போது, கடுமையான பயிற்சி பெற்றார். மெல்போர்னில் 1978ல் இருந்து நடந்து வரும் மாரத்தான் உலக அளவில் பிரசித்தி பெற்றது. உலகின் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் இந்த மாரத்தானில் பங்கேற்க, ஒற்றை காலில் நிற்பர். இதில் பங்கேற்பதற்காகவே, பல விளையாட்டு கிளப்கள் பயிற்சி அளிக்கின்றன. அரை கி.மீ., மாரத்தான், ஐந்து, பத்து கி.மீ., தொலைவிலான மாரத்தான் போட்டிகள் நடக்கும். கடந்த வாரம் 42 கி.மீ., தொலைவிலான மாரத்தான் நடந்தது. இதில் மிதுன் பங்கேற்றார். ஆஸ்திரேலியாவின், பேடெய்ன் அவென்யூவில் துவங்கி, பே டிரெயல் சாலை வழியாக சென்று, உலக பிரசித்தி பெற்ற மெல்போர்ன் விளையாட்டு அரங்கில் முடிவடைந்தது. இதில் பங்கேற்ற மிதுன், ஆறு மணி நேரத்தில் இலக்கை எட்டி, முதல் பரிசை தட்டி சென்றார்.தான் வெற்றி பெற்ற செய்தியை, தாய், தந்தை, தங்கை மற்றும் குடும்பத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். மிதுனுக்கு பாராட்டுகள் குவிந்தன. உறவினர்கள், நண்பர்கள், அறிமுகம் உள்ளவர்கள் அவரை தொடர்பு கொண்டு வாழ்த்தினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை