ஆண் குழந்தை பெறாத ஆத்திரம் மனைவியை தாக்கியவர் கைது
சித்ரதுர்கா: ஆண் குழந்தை பெற்று தரவில்லை என்பதால், மனைவிக்கு பலவந்தமாக கருக்கலைப்பு செய்ததுடன், அவரை தாக்கி காயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.சித்ரதுர்கா மாவட்டம், சல்லகெரே தாலுகாவின், மந்தலஹட்டி கிராமத்தில் வசிப்பவர் காடமலிங்கையா, 37. இவரது மனைவி சாந்தம்மா, 29. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.காடமலிங்கையா, ஹம்பி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., முடித்தவர். தேவரஹள்ளி கிராம பஞ்சாயத்து கவுன்சிலராகவும் உள்ளார். நன்கு படித்தவர் என்றாலும், அதற்கான பண்பும், பக்குவமும் அவரிடம் இல்லை.இரண்டும் பெண் குழந்தையாக பிறந்ததால், மனைவியை இம்சித்து வந்தார். மூன்றாவதாக கர்ப்பமடைந்த மனைவிக்கு, மூன்று முறை பாலின பரிசோதனை செய்து, பலவந்தமாக கருக்கலைப்பு செய்தார். ஆண் குழந்தை பெறும்படி அவ்வப்போது தாக்கி துன்புறுத்தியுள்ளார்.மேலும், ஆண் குழந்தைக்காக அதே கிராமத்தின் கவுரம்மா என்ற இளம் பெண்ணை, இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வழக்கம் போன்று நேற்று காலையும், ஆண் குழந்தை விஷயத்தில் காடமலிங்கையா, மனைவியுடன் தகராறு செய்தார். கண் மூடித்தனமாக தாக்கினார். இதில் காயமடைந்த சாந்தம்மா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார். தகவல் அறிந்த சல்லகெரே போலீசார், காடமலிங்கையாவை கைது செய்தனர்.