கஞ்சா போதையில் மாற்றுத்திறனாளியை பலாத்காரம் செய்ய முயற்சித்தவர் கைது
ஆடுகோடி: பெங்களூரில் வாய்பேசவும், நடக்கவும் முடியாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தவரை அப்பகுதியினர் அடித்து உதைத்து, போலீசில் ஒப்படைத்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெங்களூரு, ஆடுகோடி எம்.ஆர்., நகரை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கு பேசவும் முடியாது; நடக்கவும் முடியாது. 9ம் தேதி இளம்பெண்ணின் பெற்றோர், மகளை வீட்டில் விட்டு விட்டு, அருகில் உள்ள மண்டபத்தில் நடந்த திருமணத்துக்கு சென்றிருந்தனர். காலை 11:00 மணியளவில் கஞ்சா போதையில் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ், 28, கதவின் பூட்டை உடைத்து, வீட்டுக்குள் நுழைந்தார். சிறிது நேரத்தில், இளம்பெண்ணின் தாய் வீட்டுக்கு திரும்பி வந்தார். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை பல முறை தட்டியும் திறக்காததால், கதவை காலால் எட்டி உதைத்து திறந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அவரது மகள், நிர்வாணமாக கீழே விழுந்திருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவின் பின்புறம் விக்னேஷ், தன் உடைகளை அணிந்து கொண்டிருந்தார். இதை பார்த்து அவர் கூச்சலிட்டார். இதனால் தப்பி ஓடிய விக்னேசை, அப்பகுதி மக்கள் பிடித்து சரமாரியாக அடித்து, கால்களை கட்டினர். பின், ஆடுகோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய விக்னேஷ் முயன்றது தெரிய வந்தது. அவரை கைது செய்தனர். தற்போது விக்னேஷ், நீதிமன்ற காவலில் உள்ளார்.