குடிபோதையில் நண்பரை குத்தி கொன்றவர் கைது
உடுப்பி: குடி போதையில் நண்பர்களுக்கு இடையே, ஏற்பட்ட வாக்குவாதம் ஒருவரின் கொலையில் முடிந்தது. உடுப்பி மாவட்டம், பைந்துார் தாலுகாவின், கொசள்ளி அருகில் தேவரகத்தே கிராமத்தில் வசிப்பவர் தாமஸ். இவருக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தில், கேரளாவை சேர்ந்த பினோ பிலிப், 45, உதய், 42, ரப்பர் அறுக்கும் வேலை செய்கின்றனர். நண்பர்களான இவர்கள், 2 ஆண்டுகளாக இந்த தோட்டத்தில் ஒன்றாக பணியாற்றுகின்றனர்; இங்கேயே தங்கியிருந்தனர். மது அருந்தும் போது, இவர்களுக்குள் ஏதாவது காரணத்தால் தகராறு வரும். அதேபோன்று, நேற்று முன்தினம் நள்ளிரவு, குடிபோதையில் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபத்தில் உதய், ரப்பர் அறுக்கும் கத்தியால், பினோ பிலிப்பை குத்தினார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த பைந்துார் போலீசார், கொலையாளியை கைது செய்தனர்.