உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நீச்சலில் வெற்றி வாகை சூடும் மணிகாந்த்

 நீச்சலில் வெற்றி வாகை சூடும் மணிகாந்த்

- நமது நிருபர் - மத்திய அரசின் 'கேலோ இந்தியா' திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல், ஏப்ரல் 3ம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் மூன்று இடங்களில், கேலோ இந்திய பழங்குடியினர் விளையாட்டு போட்டிகள் நடந்தன. இந்தியாவில் உள்ள பழங்குடியின விளையாட்டு வீரர்கள் திறமையை வெளி கொண்டு வரும் வகையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், கர்நாடகா மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இதில், நீச்சல் பிரிவில் கர்நாடகாவின் மணிகாந்த், எட்டு தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். சித்ரதுர்கா மாவட்டத்தை சேர்ந்த மணிகாந்த், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் கல்வியுடன் சேர்த்து விளையாட்டு பயிற்சியும் பெறுகிறார். பசவனகுடி அக்வாடிக் மையத்தில் தங்கியிருந்து, தொழில்முறையாக நீச்சல் பயிற்சியும் பெறுகிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் நீச்சல் போட்டியில் 'பிரெஸ்ட் ஸ்ட்ரோக், ப்ரீஸ்டைல், பட்டர்பிளை, பேக் ஸ்ட்ரோக்' என நான்கு முக்கிய நீச்சல் முறைகளிலும் பதக்கம் வென்று தன் திறமையை நிரூபித்து அசத்தி னார். மணிகாந்திற்கு நீச்சல் மீது ஆர்வம் ஏற்பட அவரது தந்தை வழி மாமா மஞ்சுநாத் தான் காரணம். தேசிய அளவிலான நீச்சல் வீரரான மஞ்சுநாத், தனது மருமகன் மணிகாந்துக்கும், நீச்சல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தி, கிணற்றில் நீந்த சொல்லி கொடுத்துள்ளார். முதலில் பட்டர்பிளை முறையில் தான் மணிகாந்த் நீச்சல் அடித்துள்ளார். நீச்சல் போட்டியிலும் அந்த முறையில் தான் பங்கேற்றுள்ளார். கடந்த 2019ல் அவரது தோளில் ஏற்பட்ட காயத்திற்கு பின், பயிற்சியாளர் சின்ஜோவின் அறிவுரையின் படி, பிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் பிரிவில் கவனம் செ லுத்தினார். தன் நீச்சல் வாழ்க்கை குறித்து மணிகாந்த் கூறியதாவது: நிறைய ஆண்டுகள் கடுமையான பயிற்சி செய்தததன் பலனை இப்போது அனுபவிக்கிறேன். கடின பயிற்சி, உழைப்புக்கு எப்போதும் பலன் உள்ளது. சத்தீஸ்கரில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டி, எனது வாழ்க்கையின் திருப்புமுனை. நான்கு நாட்களில் ஒன்பது வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிடுவது சவாலாக இருந்தது. ஒவ்வொரு போட்டி முடிந்ததும் உடனடியாக உடையை மாற்றிவிட்டு, அடுத்த போட்டிக்கு செல்ல வேண்டி இருந்தது. தற்போதைய என் முழு க வனமும் என் பலம், வேகம், மனநிலையை மேம்படுத்துவதில் உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறுவதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை