இளம்பெண்களை ஆபாச படம் எடுத்த மணிப்பூர் வாலிபர் கைது
அசோக்நகர்: இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து, சமூக வலை தளங்களில் பதிவிட்ட, மணிப்பூர் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரு, எம்.ஜி.ரோடு, பிரிகேட் சாலையில் நடந்து செல்லும், இளம்பெண்களை ஆபாசமாக படம், வீடியோ எடுத்து, 'தில்பார் ஜானி 64' என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டு இருந்தது. இதுபற்றி அசோக்நகர் போலீசார் தெரியவந்தது. தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர். அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு யாருடையது என்று விசாரித்தபோது, மணிப்பூர் மாநிலம், இம்பாலை சேர்ந்த திலாவர் உசேன், 19, என்பவருடையது என்பது தெரிந்தது. இவர், பெங்களூரு கொத்தனுாரில் தங்கி இருந்து, உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவரை, அசோக்நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இளம்பெண்களை ஆபாச வீடியோ, படம் எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியதை ஒப்புக் கொண்டார். அவரிடம் இருந்து மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது. வீடியோ, படங்களை அழிக்க, மொபைல் போனை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்ப, போலீசார் தயாராகி வருகின்றனர். மெட்ரோவில் பயணம் செய்த இளம்பெண்களை, ஆபாசமாக புகைப்படம் எடுத்து சமூக வலை தளத்தில் பதிவிட்டதாக, ஹாசனை சேர்ந்த திகன் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.