காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் டில்லிக்கு... படையெடுப்பு! அமைச்சர் பதவிகள் கேட்டு தலைநகரில் தவம்
கர்நாடக அரசு பதவியேற்று, இரண்டரை ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என, தகவல் வெளியானது. சில மாதங்களாகவே, அமைச்சர்களின் பணித்திறனை, காங்., மேலிடம் கண்காணித்தது. அவரவர் துறையில் அமைச்சர்கள் செய்துள்ள சாதனை, செயல்படுத்திய திட்டங்கள், அவர்களுக்கு மக்களிடம் உள்ள நற்பெயர் என, அனைத்தையும் கவனித்தது. சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என, கூறப்பட்டது. கட்சி பணி பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்த பின், கர்நாடகாவில் அமைச்சரவை மாற்றப்படும் என, எம்.எல்.ஏ.,க்கள் எதிர்பார்த்தனர். தங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். இரண்டரை ஆண்டாக பதவியை அனுபவித்த அமைச்சர்களை நீக்கிவிட்டு, அவர்களை கட்சி பணிக்கு பயன்படுத்தும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் பலரும் வலியுறுத்தினர். 'நவம்பர் இரண்டாவது வாரம், முதல் வர், துணை முதல்வர் டில்லிக்கு சென்று அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் பெறுவர்' எனவும், கூறப்பட்டது. இந்த சூழலில், பீஹார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. எனவே மேலிடத்தை சந்தித்து, ஆறுதல் கூறும் நோக்கில், முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் டில்லி சென்றார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து, ஆலோசனை நடத்திவிட்டு, பெங்களூரு திரும்பினார். பச்சைக்கொடி அப்போது ராகுல், அமைச்சரவையை மாற்றியமைக்க, பச்சைக்கொடி காட்டியுள்ளார். அமைச்சரவையில் இருந்து யாரை நீக்குவது, யாரை சேர்ப்பது என்பது குறித்து, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் ஆலோசனை நடத்தும்படியும், முதல்வரிடம் கூறியுள்ளார். இதனால், முதல்வர் சித்தராமையா இன்று மீண்டும் டில்லி செல்கிறார். ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, தேசிய பொதுச்செயலர் வேணுகோபால், மாநில பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உட்பட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார். இவ்வேளையில் அமைச்சரவையில் மாற்றம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும், அமைச்சரவையை மாற்றி அமைப்பதில், மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உடன்பாடில்லை. பெலகாவியில் நடக்க உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர், பொங்கல் முடிந்த பின், பார்த்து கொள்ளலாம் என, அவர் ஏற்கனவே கூறியிருந்தார். எனவே அவருடன் முதல்வர் ஆலோசனை நடத்தி, ஒப்புதல் பெற்றால் இன்னும் சில நாட்களில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம். இதற்கிடையில், அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் நேற்று டில்லிக்கு படையெடுத்துள்ளனர். எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, பசவராஜ் ராயரெட்டி, அப்பாஜி நாடகவுடா, அஜய்சிங் உட்பட பலர் டில்லியில் தங்கி, மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சர் பதவிக்காக முயற்சிக்கின்றனர். இழப்பது யார்? அதே நேரம், பதவி பறிபோகும் என்ற நடுக்கத்தில் உள்ள அமைச்சர்களும், ஒருவர் பின் ஒருவராக டில்லிக்கு பறக்கின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, முனியப்பா, மஹாதேவப்பா, வெங்கடேஷ், சிவானந்த பாட்டீல், திம்மாபூர், லட்சுமி ஹெப்பால்கர், ரஹீம்கான், சுதாகர், சரண பசப்பா ஆகியோர் அமைச்சர் பதவியை இழக்க கூடும் என தெரிகிறது. இதற்கிடையே துணை முதல்வர் சிவகுமாரும், அவரது தம்பி சுரேஷும் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இவர்களின் செயல்பாடுகளும் சஸ்பென்சாக உள்ளது. முதல்வர் மாற்றத்துக்காக இவர்கள் காய் நகர்த்துவதாகவும் கூறப்படுகிறது.