கன்னடத்தில் முதுகலை பட்டம்: 11 தங்க பதக்கம் வென்ற மாணவி
பெங்களூரு கன்னடத்தில் முதுகலை பட்டம் படித்த மாணவி பிரேமா, 11 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தி உள்ளார். பெங்களூரு, ஞானபாரதியில் உள்ள பெங்களூரு பல்கலைக்கழகத்தின் 60வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. கவர்னர் தாவர்சந்த் கெலாட் பங்கேற்றார். மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது: கல்வி பெறுவதன் நோக்கம் அறிவை வளர்க்க மட்டும் இல்லை. சமூகத்தின் நலனுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும். பல்கலைக்கழகத்தின் 60 ஆண்டு கால கல்வி சாதனை, ஆராய்ச்சி, சமூக சேவையின் பயணத்தை இந்த பட்டமளிப்பு விழா நினைவுகூர்கிறது. தேசிய, சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து, உயர்கல்வியில் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கி உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் தற்போது கல்வியில் இருந்து அனுபவம் மற்றும் செயல்பாட்டு பாதைக்குள் செல்ல உள்ளீர்கள். புதிய சவால்கள், வாய்ப்புகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை உங்களுக்கு கிடைக்கட்டும். பல்கலைக்கழகங்களை சிறந்த மையங்களாக மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. ஆராய்ச்சி, புதுமை, உள்ளூர் மொழிகள் மூலம் உயர்கல்வியை மேம்படுத்துவது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பல்கலைக்கழகங்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். புதிய இந்தியா, தன்னம்பிக்கை இந்தியாவை உருவாக்க மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்றவற்றை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், கன்னடத்தில் முதுகலை பட்டம் படித்த, மாணவி பிரேமா, 11 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். அவருக்கு கவர்னர் பாராட்டு தெரிவித்தார். விழாவில் உயர் கல்வி அமைச்சர் எம்.சி.சுதாகர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெயகர் ஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விஜேந்திரா பாராட்டு
பிரேமாவின் சாதனையை கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும் பாராட்டி உள்ளார்.'கன்னடத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 11 தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி பிரேமா, எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சான்றாக உள்ளார். திறமையான மாணவர்களுக்கு கல்வி தான் ஆயுதம் என்பதை நிரூபித்து இருக்கிறார். அவர் செய்தது, பாராட்டத்தக்க சாதனை' என, 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.