| ADDED : நவ 27, 2025 07:33 AM
பெங்களூரு: “உங்களால் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள்,” என, காங்கிரஸ் கட்சியினருக்கு, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா சவால் விடுத்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரசுக்கு 140 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது என்று, சித்தராமையா, சிவகுமார் கூறுகின்றனர். இத்தனை எம்.எல்.ஏ.,க்களை வைத்துக் கொண்டு, உங்களால் ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாவிட்டால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள். முதல்வர் பதவி பிரச்னையை தீர்க்காமல், பெலகா வி கூட்டத்தொடருக்கு வந்து நாடகம் போட வேண்டாம். கூட்டத்தொடரில் கரும்பு, மக்காச்சோள விவசாயிகள் சந்திக்கும் பிரச்னை பற்றி விவாதிக்க வேண்டி உள்ளது. பாக்கு விவசாயிகளும் சிக்கலில் உள்ளனர். காங்கிரசில் நடக்கும் உட்கட்சி சண்டையால், மாநில நிர்வாக இயந்திரம் முடங்கி விட்டது. மக்கள் பிரச்னையை தீர்க்க முதல்வருக்கு நேரம் இல்லை. அக்கட்சியின் உள்விவகாரத்தில் நாங்கள் தலையிட மாட்டோம். சிவகுமார் அல்லது வேறு யாரும் கட்சியை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாலும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிர்க்கட்சியாக பொறுப்பாக வேலை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.