கர்நாடகாவில் 27 வரை மழை வானிலை மையம் அறிவிப்பு
பெங்களூரு: 'வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதால், அடுத்த ஐந்து நாட்கள், பெங்களூரு உட்பட, கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக கர்நாடகாவில் ஆங்காங்கே சில நாட்களாக மழை பெய்கிறது. இம்மாதம் 27 வரை, பெங்களூரு உட்பட, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் அறிகுறி தென்படுகிறது.பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும். ஆலங்கட்டி மழையும் பெய்ய கூடும். 30 முதல் 50 கி.மீ., வேகத்துக்கு பலத்த காற்று வீசும். தட்சிண கன்னடா, உத்தரகன்னடா, குடகு, ஹாசன், ஷிவமொக்கா, சிக்கமகளூரு, பெங்களூரு ரூரல், கோலார், மாண்டியா, துமகூரு, மைசூரு, சாம்ராஜ்நகர், சித்ரதுர்கா, பல்லாரி மாவட்டங்களில் இன்று ஆலங்கட்டியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது.அதன் பின் ஒரு வாரம், 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இம்மாவட்டங்களில், 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் 30 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். மீனவர்கள் மீன் பிடிக்க, கடலுக்குள் இறங்க வேண்டாம்.பெங்களூரிலும் 25, 26ல் பலத்த மழை பெய்யலாம். நகரில் அடுத்த ஒரு வாரம் வரை, வெப்பநிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சம் 21 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை இருக்கும். பகலில் வெப்பம் அதிகம் இருக்கும்; மாலையில் மழை பெய்யும். பெங்களூரில் வழக்கமான கோடை மழையை விட, 113 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.