மெட்ரோ கட்டணம் உயர்வு பயணியர் எண்ணிக்கை சரிவு
பெங்களூரு: மெட்ரோ ரயில் கட்டணம் உயர்த்தப்பட்ட பின், பயணியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது பெங்களூரு மெட்ரோ நிறுவனத்துக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2017ம் ஆண்டுக்குப் பின், முதன் முறையாக பெங்களூரு மெட்ரோ நிறுவனம், ரயில் கட்டணத்தை 46 சதவீதம் உயர்த்தியுள்ளது. கட்டண உயர்வால் அன்றாட பயணியர், மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, புகார்கள் வந்துள்ளன. கட்டண உயர்வுக்குப் பின், மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளது.பிப்ரவரி 9ம் தேதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. மறுநாள் 10ம் தேதி, 8,28,149 பேரும், 11ம் தேதி 7,78,774 பேரும் பயணித்தனர். மற்ற நாட்களுடன் ஒப்பிட்டால், பயணியர் எண்ணிக்கை 6 சதவீதம் குறைந்துள்ளது.கட்டண உயர்வால், தினமும் 55.60 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மெட்ரோ நிறுவன அதிகாரிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பயணியர் எண்ணிக்கை குறைவதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருவாய் குறையும் என, அஞ்சுகின்றனர்.இதற்கிடையே, மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்கும்படி, எதிர்க்கட்சியினரும், பயணியரும் நெருக்கடி கொடுக்கின்றனர்.