மெட்ரோ ரயில்கள் தாமதம் பயணியர் கடும் அவதி
பெங்களூரு: பரபரப்பான நேரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாலும், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதாலும் பயணியர் 30 நிமிடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது.பெங்களூரில் காலை நேரங்களில் பணிக்கு செல்லும் பலரும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வர். இதனால், பொதுவாகவே காலையில் பரபரப்பான நேரங்களில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்படும்.எப்போதும் பரபரப்பாக இயங்கும் மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலையில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.வழக்கமாக பரபரப்பான நேரத்தில் 3 முதல் 5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். ஆனால், நேற்று 10 நிமிடங்களுக்கு ஒரு முறை இயக்கப்பட்டது. இதனால், பயணியர் நெருக்கி அடித்து ரயிலில் இடம் பிடிக்கும் நிலைமை உருவானது. பயணியர் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பயணியர் பலரும் அரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் சூழல் உருவாகியது. இதனால் பயணியர் எரிச்சல் அடைந்தனர்.விடுமுறை தினம் என்பதால் ரயில்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டு உள்ளதாக பயணியர் பலரும் குற்றம் சாட்டினர். பயணியர் கூட்டம், கூட்டமாக காத்திருக்கும் வீடியோக்கள் இணையத்தில் பரவின. அதிக அளவு மெஜஸ்டிக், மாகடி ஆகிய நிலையங்களில் இருந்தே பகிரப்பட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்து பெங்களூரு மத்திய தொகுதி லோக்சபா பா.ஜ., - எம்.பி., பி.சி.மோகன் தன் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டார்.இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:பொது விடுமுறை தினமான இன்று (நேற்று) மெஜஸ்டிக் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணியர் அதிக அளவு வந்துள்ளனர். இதை சமாளிப்பதற்காக பையப்பனஹள்ளியில் இருந்து நான்கு ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட்டு உள்ளன. மாலை முதல் ரயில்கள் ஐந்து நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.