சட்டவிரோத சுரங்க தொழிலால் அரசுக்கு ரூ.80,000 கோடி நஷ்டம் மேல்சபையில் அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தகவல்
பெங்களூரு: “கர்நாடகாவில் 2006 முதல், 2012 வரை நடந்த சட்டவிரோத சரங்கத்தொழிலால், அரசு கருவூலத்துக்கு 80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது,” என, மேல்சபையில் சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் தெரிவித்தார். கர்நாடக சட்டவிரோத சுரங்கத்தொழிலால் சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்யவும், ஜப்தி செய்யவும் ஆணையர் நியமனம் செய்வதற்கான மசோதாவை, சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், மேல்சபையில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: கடந்த 2006, 2011, 2012ல், மாநிலத்தின் பல்வேறு இடங்களில், சட்டவிரோதமான சுரங்கத்தொழில் நடந்தது. சீனா, பாகிஸ்தான் உட்பட, பல்வேறு வெளிநாடுகளுக்கு மொத்தம் 80,000 மெட்ரிக் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்ததால், அரசு கருவூலத்துக்கு 80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, அரசுக்கு அளித்த அறிக்கையில், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத்தாது குறித்து, விரிவாக விவரித்துள்ளார். ஒரு டன் இரும்புத்தாதுவை, 4,500 ரூபாய் வீதம் 80,000 மெட்ரிக் டன் இரும்புத்தாது ஏற்றுமதி செய்துள்ளனர். இதை பறிமுதல் செய்வது, பொறுப்புள்ள அரசின் கடமையாகும். கடந்த 2006, 2011, 2012ல் சுரங்கத்தொழில் நடத்தியவர்கள், விதிகளை காற்றில் பறக்க விட்டுள்ளனர். ஒரு காலத்தில், கவர்னரின் கார் மற்றும் அவரது மெய்க்காவல் வாகனங்கள் செல்வதை அலட்சியப்படுத்தி, லாரியில் இரும்புத்தாதுவை கொண்டு சென்ற உதாரணங்களும் உள்ளன. இதற்கு அரசு கடிவாளம் போடாததே காரணம். இதற்கு முன்பு ஷேர் மார்க்கெட்களில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த ஹர்ஷத் மேத்தாவிடம் விசாரணை நடத்தி, 7,000 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதேபோன்று சட்டவிரோத சுரங்க தொழில் நடத்தியவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, நஷ்டதொகையை பறிமுதல் செய்ய வேண்டும். இதற்காக மசோதா கொண்டு வந்துள்ளோம். மசோதாவை பற்றி, அமைச்சரவை கூட்டம், அமைச்சரவை துணை கமிட்டியிலும் நீண்ட ஆலோசனை நடந்தது. அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி செய்தே ஆக வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் பேசினார். மசோதா தொடர்பாக, மேல்சபை உறுப்பினர்கள் ஐவான் டிசோசா, சரவணா, சதீஷ் உட்பட, மற்ற உறுப்பினர்கள் பேசினர். அரசுக்கு சில ஆலோசனைகள் கூறினர். அதன்பின் மசோதா நிறைவேறியது.